தெருவின் நடுவில் நின்று மேற்கே திரும்பிப் பார்த்தால் ஆண்டாள் கோயில் தெரியும்.
சின்ன வீதிதான்.ஆண்டாள் கோயிலுக்கு எதிரே உள்ள சன்னதித் தெருவின் நீட்சிதான்
இந்தத் தெரு. குறுக்கே கீழ ரத வீதி இருக்கும்.
எங்கள் வீட்டின் இலக்கம் 3 ஆகும். மொத்தமே 10 வீடுகள்தான்.
ஒன்னாம் நம்பர் வீடுதான்
தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த திரு ரா கிருஷ்ணசாமி அவர்களின்
வீடு. இவர் சாத்தூரின் எம் எல் ஏ ஆகவும் இருந்திருக்கிறார். அவர் வீட்டிலும், எதிரே இருந்த அவரது உறவினர் திரு நா.கி வீட்டிலும் மட்டுமே டெலிபோன் உண்டு. பெரிய கறுப்புக் கலர் கருவியில் லோக்கல் கால் பேசுவதற்கே எக்ஸ்சேஞ்ச்மூலமே லிங்க் கிடைக்கிற காலம. அவசரத்திற்கு இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.அந்த ஊரில்
கூட்டத்திற்கு பேச வருகிற காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் அவர் வீட்டுக்கு மரியாதைக்காகவும்,இரவு உணவிற்காகவும் வருவார்கள். ஒருமுறை நடிகர் பிரேம் ஆனந்த் (சிவாஜி படங்களில் 70 களில் நடித்தவர்) வந்தபோது தெருவே போய் வேடிக்கை பார்த்தது. விவசாயிகள் போராட்டத்தின் போது
அவரது வீடு தி மு க வினரால் கல்லெறிக்குள்ளானது. அவரது வீட்டில் இருந்த திரு மூக்கய்யா என்ற பணியாளரை எங்கள் வீட்டில் வைத்துதான் எங்கள் அப்பா பாதுகாத்தார். எங்கள் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த
வேனற்பந்தலை அக்கும்பல் எட்டி உதைத்து உலுக்கியது எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது திருவில்லிபுத்தூரில் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த திரு ராமசந்திரன் நடுநிலையாக இருந்து அப்பிரச்சினையை
சமாளித்ததாக பரவலான பாராட்டு இருந்தது. திரு ரா.கி அவர்கள் அப்போது தனியாக வீடு பார்த்துக் குடி போயிருந்தார். அந்த வீட்டிற்கு கலவரக் கும்பல் போன போது அவர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பினார் என்று மறுநாள் பரபரப்பான பேச்சு ஊருக்குள் இருந்தது. இந்தப் பெரியவர் ராவன்னா கீனாவின் பெயர் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தின் டிரஸ்ட்டிகளின் பட்டியலில் இருந்ததை நான் 2001 ல் அங்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டிற்கு சென்ற போது பார்த்தேன். இவரது பேத்தி பிரேமா அவர்களின் கணவர் திரு வரதராஜுலு பிந்தைய காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தார். நான் பக்கத்தில் இருந்து பார்த்த முதல் அரசியல்வாதி ரா கி தான். எளிமையானவர். யாரும் எப்போதும் சந்திக்க முடியும்.
இரண்டாம் நம்பர் வீட்டு பெரியவர்களை நாங்கள் பெரியப்பா, பெரியம்மா என்றுதான் அழைப்போம்.ஆனால் உறவினர்கள் அலல. அவர்கள் வீட்டில் சண்முகம்,.லட்சுமி,கோமதி என்ற சகோதரிகளும், துரை, சந்திரன், மாரியப்பன் ஆகியோரும் உண்டு. திரு சந்திரன் அவர்களை மட்டும் 30 வருடம் கழித்து 2006 ல் மதுரையில் சந்தித்தேன். அப்போதெல்லாம் திருவில்லிபுத்தூரில் கல்லூரிகள் கிடையாது. சிவகாசிக்கு போகவேண்டும். பாலிடெக்னிக் என்றால் ராஜபாளையம் போக வேண்டும். சந்திரன் சைக்கிளில் தினமும் 10 கி மீ சென்று பாலிடெக்னிக்கில் படித்தார்.அந்தப் பெரியப்பாவின் பேரன்தான் பின்னர் சாத்தூரில் எல் ஐ சி பணிக்கு வந்த திரு நமசிவாயம். காலச் சக்கரத்தின் சுழற்சியில் இப்படிச் சில சந்திப்புகளும் அரிதாக நிகழ்கின்றன.
மூன்றாம் நம்பர் வீடுதான் எங்கள் வீடு. அந்த தெருவில் இருந்த ஒரே ஓட்டு வீடு அதுதான். மின் விசிறி கிடையாது.வெயில் காலத்தில் நீர்க் கடுப்பால் பல நாள் இரவு தவித்திருக்கிறேன்.எடுப்புக் கக்கூசுதான். ( அன்றைக்கு எங்களது கஷ்டம் மட்டும்தான் புரிந்திருந்தது. அருந்ததியனின் வலி தெரியாத அடி முட்டாள்த் தனத்திற்காக இன்றைக்கு வருந்துகிறேன் ). எதிரே மின் விளக்கு வராத வரை எங்கள் வீட்டிற்க்கு எதிர்ப் பகுதியே பொதுக் கழிப்பறையாக பயன்பட்டது. அப்போது தண்ணீர்க் கஷ்டம் ரொம்ப இருந்ததால் வீட்டிற்குள் முனிசிபல் தண்ணீர்க் குழாய்க்க்கான தொட்டி கிணறு மாதிரி ஆழமாக இருக்கும். கீழே இருந்து தண்ணீரைப் பிடித்து யாராவது கொடுத்தால் மேலே யாராவது நின்று வாங்க வேண்டும்,
நான்காவது வீடு ஒரு உதவி வணிக வரி அதிகாரியின் வீடு. அவர் வீட்டிற்க்கு போய்தான் ஆல் இந்திய ரேடியோ நியூஸ் கேட்போம்.
கர கர வென்று கேட்டாலும் சரோஜ் நாராயண சாமியின் குரல் இப்போதும் காதிலேயே ஒலிக்கிறது. அந்த அதிகாரியின் பெயர் நடேசன் என நினைக்கிறேன். அவரது மகன் முருகேசன் மதுரையில் படித்தார். தீபாவளிக்கு நிறைய வெடிகளைப் போடுவதை ஆதங்கத்தோடு வேடிக்கை பார்ப்போம்.
ஐந்தாவது இடம் கோகுலம் என்று போடப்பட்டிருக்கும். காலி இடம். முட்புதர் மண்டியிருக்கும். ஒரு தடவை பெரிய மண்ணுளிப்
பாம்பை பிடித்து எரித்தது நினைவில் இருக்கிறது.
எதிர்ப்பக்கத்தில் ஆதி ரங்கநாதர் கோயில் சின்னதாக இருக்கும். அதற்குப் பக்கத்தில் உள்ள பெரிய காலி இடத்தில் பெரிய விழா நடத்தி கவர்னர் கே கே ஷா ( கலைஞர் அரசை 1976 ல் டிஸ்மிஸ் செய்யப் பரிந்துரைத்தவர் ) அடிக்கல் நாட்டிய கட்டிடம் பின்னர் எழும்பவே இல்லை. அக் காலி இடம் வாயிலாகவே எனது நண்பன் வீட்டிற்க்கு குறுக்கு வழியில் ஓடிப் போவேன்.எனவே அக் கட்டிடம் வராததில் மகிழ்ச்சியே எனக்குள் இருந்தது.
எதிரே பால் பண்ணை. எனவே தண்ணீர் இல்லாத பால் கிடைக்கும். பின்னர் அரசியலில் பிரபலமான திரு தாமரைக்கனி அவர்களின் அம்மா அங்குதான் தனது மாட்டை பால் கறக்க கொண்டு வருவார். தாமரைக்கனி மிக மிக ஒல்லியாக அந்தத் தெருவில் அடிக்கடி நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்.இவ்வளவு பக்கத்தில் இருந்த பால் பண்ணையில் பால் வாங்குவதற்கான கூப்பன் வாங்குவதற்கு 1 கி மீ க்கும் அதிகமாக நடந்து பஸ் ஸ்டாண்ட் தாண்டிச் செல்ல வேண்டும்.
பத்தாம் நம்பர் வீடு எனது நண்பன் சீனிவாசன் வீடு. அவனது அப்பா திரு கோபால்சாமி ( வக்கீல்) ஆவார். எங்கள் தெருவில் அவர் மட்டுமே ஸ்கூட்டர் வைத்திருந்தார்.அவர்கள் வீட்டில் பெரிய தோட்டம் உண்டு. இரண்டு பெரிய அசோகா மரங்கள், துளசி மாடம், தென்னை மரங்கள் எல்லாம் இருந்தது நினைவுக்கு வருகிறது. நாங்கள் அவர்கள் வீட்டில்தான் தண்ணீர் இறைத்துக் கொள்வோம்.இராட்டினத்தில் தண்ணீர் இறைத்து முடிவதற்குள் கைகளில் தோல் உரிந்துவிடும். 31 குடங்கள் எடுத்தால்தான் எங்கள் வீட்டு டிரம், சிமின்ட் தொட்டி உட்பட பாத்திரங்கள் நிரம்பும். பெடல் போடுகிற பேபி கார் ஒன்று அவர்கள் வீட்டில் உண்டு. ஒன்னாவது வகுப்பு மட்டும் என்னோடு படித்த சீனிவாசன் பிறகு ஸ்கூல் மாறி கான்வென்ட் போன போது எனக்கு வருத்தமாக இருந்தது.புது பாசன் சட்டைகளை அவன் போடுவான். நியூஸ் பேப்பர் மாதிரி கொல்லாஜ் செய்த டிசைன் சட்டையை அவன் போட்டபோது அது மாதிரி வேண்டும் என்று அப்பாவிடம் அழுது இருக்கிறேன். ஆனால் கிடைக்கவில்லை. திரு சீனிவாசன் விவசாயக் கல்லூரியில் படித்து தற்போது விவசாய அதிகாரியாக இருக்கிறான். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒருவர்க்கு உதவி கோரி ஒரு கடிதம் எழுதியிருந்தான். நல்ல ஆங்கிலத்தில் இருந்தது அக் கடிதம். இவனது கொள்ளுத் தாத்தாதான் ராவன்னா கீனா அவர்கள்.
எங்கள் தெருவிலேயே சிவகிரி அரண்மனையின் ஒரு பக்கம் அமைந்திருக்கும்.எங்கள் அப்பா அதில்தான் வேலை பார்த்தார்.
அதில் மின்சார வாரிய ஆபீஸ் இருந்தது. மின் கட்டணம் காட்டுகிற பிரிவு எங்கள் தெருவில்தான் இருந்தது.
எங்கள் தெரு முக்கில் ஒரு திறந்த மண்டபம் ஒன்று இருந்தது. ஆனால் அது சிதிலமடைந்ததால் அகற்றப்பட்டது. சொக்கப் பனை எங்கள் தெருவிலேயே நடைபெறும். ஓங்கி உயர்ந்து எரிகிற தீயை இப்போது நினைத்தாலும் அதன் கதகதப்பை உணர முடிகிறது.வழுக்கு மரம், உறியடி எல்லாம் எங்கள் தெருவில்தான் நடைபெறும்.
விவரம் அறிந்த பின்னர் ஐந்தாறு ஆண்டுகளே அத்தெருவில் இருந்தாலும் ஏதோ நீண்ட காலம் இருந்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.
