Showing posts with label andal temple. Show all posts
Showing posts with label andal temple. Show all posts

Wednesday, 10 November 2010

திருவில்லிபுத்தூர் பெரிய தேர்


திருவாரூர் தேர்தான் தமிழ்நாட்டில் பெரிது என்று திருவில்லிபுத்தூர்காரர்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அப்படித் தங்கள் ஊர்த் தேர் பற்றி பெருமை உண்டு.

17 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேர் 1974 ல் மீண்டும் ஓட ஆரம்பித்தது.( ஓர் ஆண்டு முன் பின் இருக்கும்) முதல் வருடம் மக்கள் மத்தியில் இருந்த ஆர்வம் சொல்லி மாளாது. அந்தத் தேரின் வடத்தை கைகளில் பிடிக்க முடியாது. அவ்வளவு பெரியது. கக்கத்தில் வைத்து கைகளால் தாங்கி இழுக்க வேண்டும். அதைத் தூக்கி இழுப்பதற்குத் தயாராவத ற்கே ஆயிரக்கணக்கானோர் தேவைப்படுவார்கள். தேரின் மேலே முதல் தட்டில் ஒரு பெரிய மத்தளம் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறை இழுக்க வேண்டுமெனும்போதும் அதை ஓங்கி இசைப்பார்கள். எல்லோரும் இழுக்க ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து இழுக்க முடியாது. ஒவ்வொரு முறை இடைவெளி விடும்போதும் தேரின் முன்பக்கம் நின்று இழுப்பவர்கள் கவனமாக வடத்தை உடனே கைகளில் இருந்து விடுவிக்காவிட்டால் உள்ளே இழுத்து சக்கரங்களுக்குள் போட்டு விடும். வடத்தின் கடைசி நுனியைப் பிடித்து நிற்பவர்களும் கைகளில் இருந்து விடுவிக்காவிட்டால் இழுத்து கீழே போட்டுவிடும்.





தேர் ஓடும்போது ரோட்டில் அதன் சக்கரங்கள் பதிந்து ஏற்படுத்துகிற பள்ளம்
மூன்றடிக்கும் மேலே இருக்கும். தெற்கு ரத வீதியில் இருக்கிற தாலுகா அலுவலகத்திற்கு அருகில் தேர் செல்லும்போது அக் கட்டிடத்தில் மோதுவது போல் போய் நின்றது. மேலரத வீதி திருப்பத்தில் தேரின் கலசம் மேலே இருந்து விழுந்துவிட்டது. 3 பேர் இறந்து போனார்கள். இவ் விபத்தின் போது நான் அந்த இடத்தில் இருந்தேன். ஒன்றரை மாதம் அங்கேயே தேர் நின்று போனது. அதற்குப் பிறகு கனமான கலசத்திற்குப் பதிலாக வெறும் மூங்கில்களிலான வர்ணம் பூசப்பட்ட கலசமே மேலே வைக்கப் பட்டது. இப்படி தேர் நிலைக்கு வந்து சேர முதல் ஆண்டு 81 நாட்கள் ஆனது.

அடுத்த ஆண்டு 12 நாட்கள் ஆனதென்று நினைக்கிறேன். மூன்றாமாண்டு தேர்த் திருவிழாவுக்கு நான் அந்த ஊரில் இருக்கவில்லை. மூன்று நாளில் தேர் நிலைக்கு வந்து விட்டது என்று நாளிதழ்களில் படித்தபோது வியப்பாக இருந்தது.

தேர் நகர்வதற்கு பினனால் பெரிய அடிக் கட்டை போட்டு நெம்புவார்கள். சக்கரத்தின் முன்பக்கம் பாதையை நெறிப்படுத்த சக்கை போடுவார்கள். ஒன்றரை ஆளின் உயரத்திற்கு மேலே இருக்கிற சக்கரங்கள் நகரும்போது கம்பீரமாய் காட்சியளிக்கும். அடிக்கட்டையையும், சக்கையையும் யார் போடுவார்கள், தேரின் மேலே சாமியோடு சாமியாய் யார் வர இயலும் என்றெல்லாம் அதிகம் நான் சிந்தித்ததில்லை.

தேர் இழுக்க ஆட்கள் வேண்டுமென்பதால் வீதிகளில் மைக்கில் அறிவிப்பார்கள். மாதக்கணக்கில் ஓடிய முதலாண்டில் கேட்க வேண்டுமா? தேர் இழுக்கிற அன்றைக்கு இந்து உயர்நிலை,நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுவிடுவார்கள். பல பேர் கிரிக்கெட் விளையாட போய் விடுவார்கள். கூட்டம் சேராமல் திரும்ப திரும்ப அறிவிப்பு செய்யப்பட்ட நாட்களும் உண்டு.

தேர்த் திருவிழாவுக்கு வெளியூரிலிருந்து எல்லா வீடுகளுக்கும் நண்பர்களும், உறவினர்களும் வருவார்கள். ஆண்டாள் கோவிலில் நடைபெறுகிற 10 நாள் விழாவிற்கும் வெளியூர் கூட்டம் நிறைய வரும். கோவில் வாசலில் ஒரு நாள் யானை ஒரு காலைத் தூக்கிக்கொண்டு மாற்று திறனாளி போல நடக்கும். ( மாற்று திறனாளி என்ற சொல்லாடலை தி ஹிந்து நாளிதழ் பத்திரிக்கையாளர் திரு கரிமேல்லா சுப்ரமணியன் ஒரு நிகழ்ச்சியில் மறுதலித்தார். அவர் கண்பார்வை அற்றவர்) தேர்க் கதைக்கு மீண்டும் வருகிறேன்.

தேர் இழுப்பதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. மழை வருவதற்காக என்ற காரணம் மக்களின் மனத்தைக் கவ்வியிருந்தது. பட்டர் ஒருவரின் கனவில் ரங்கமன்னார் வந்து சொன்னார் என்ற செய்தி ஒன்றும் உலா வந்தது. இதே காலத்தில் திருவண்ணாமலையில் ( ஸ்ரீவிக்கு அருகே) ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு இயேசு காட்சியளித்ததாக ஒரு பரபரப்பு ஏற்பட்டது. நம்பிக்கைகளின் அடிப்படையிலான இச்செய்திகள் புதிய மத நிகழ்ச்சிகளுக்கு வழிவகுத்தன. கிறித்தவர்கள் வழிபாடு இடமாக அக் காட்சியிடம் மாற்றப்பட்டது.

ஓடாமல் இருந்த திருவாரூர் தேரும் பின்னாளில் ஓடுவதற்கு வழி வகுக்கப் பட்டது. பட்டர் கனவில் ரங்கமன்னார் வந்தாரோ இல்லையோ திருவில்லிபுத்தூர் தேர் அசைகிற அழகு இன்னும் என் கண்களில் நிற்கிறது.

Tuesday, 9 November 2010

தண்ணீர் ... தண்ணீர்..



courtesy: kisanbachao.blogspot.com

கோமல் சுவாமிநாதனின் அத்திப் பட்டியை திரையில் பார்த்த போது எனக்கு அது ஒன்றும் வியப்பாக இல்லை. ஏனெனில் திருவில்லிபுதூரின் தண்ணீர் பற்றாக்குறை பல்லாண்டுப் பிரச்சினையாக இருந்தது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக மழையே இல்லை என்று எனக்கு நினைவில் இருக்கிற காலம் தொட்டுப் பேசிக் கேட்டிருக்கிறேன். திருவில்லிபுதூரின் பெரிய தேர் 1956 லிருந்து ஓடாமல் இருந்ததுதான் காரணம் என்று பரவலான நம்பிக்கை உருவாக்கப்பட்டது. ஒரு பட்டரின் கனவில் ரங்க மன்னார் வந்து சொன்னதாக ஒரு செய்தியும் உலா வந்தது. இப் பின்புலத்தில்தான் பெரிய தேர் உலா மீண்டும் துவங்கியது.

இதே காலத்தில் தமிழகம் முழுக்க மழை பெய்யாமல் கிருபானந்த வாரியார், குன்னக்குடி வைத்யநாதன் போன்றோர் சென்னை கடற்க் கரையில் பிரார்த்தனை, இசை ஆகியவற்றை அரங்கேற்றியது நினைவில் உள்ளது. சோவியத் யூனியன் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு செயற்கை மழைக்கான முயற்சிகளும் செய்யப்பட்டன. பஞ்சமும் சேர்ந்து கொண்டது. அப்போது திருவில்லிபுத்தூர் இருந்த ராமநாதபுரம் மாவட்டம்தான் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். மக்கள் கப்பைக் கிழங்கை உணவாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எம் ஜி ஆர் திறந்த கஞ்சித் தொட்டிகள் மிகப் பெரிய அரசியல் ஆயுதங்களாக மாறின. கலைஞரின் அன்றைய ஆட்சியின் மிகப் பெரிய களங்கமாக அது கருதப்பட்டது.எங்களைப் போன்ற இல்லங்களிலும் அரிசிக்குப் பதிலாக கேப்பை (கேழ்வரகு), கோதுமை ஆகியவற்றுக்கு நகர வேண்டியிருந்தது.

அப்போது வீடுகளில் நகராட்சி குடிநீர் ஒரு நாளைக்கு ஐந்தாறு குடங்கள் மட்டுமே வரும். அதுவும் குழாய் மட்டத்தை இறக்கிக் கொண்டே சென்றால்தான் தண்ணீர் கிடைக்கும். போட்டி போட்டுகொண்டு பக்கத்து பக்கத்து வீட்டில் குழாய் இறங்கிக் கொண்டே போகும். பற்றாக்குறை எப்படி பொறாமைகளை உருவாக்கும், மனித உறவுகளை பாதிக்கும் என்பதை அனுபவ ரீதியாகக் கண்டிருக்கிறேன்.

அரங்கநாதர் சன்னதி தெருவும்,சக்கரைக்குளமும் சந்திக்கிற முனையில் ஒரு அடி குழாய் போடப்பட்டது. போர் இயந்திரம் உள்ளே துளை போட துளை போட தண்ணீர் பீச்சியடிப்பதைப் பார்க்க நூற்றுக் கணக்கானோர் திரண்டு நின்றதும், ஆரவாரம் செய்ததும் மறக்க இயலாது.அந்த அடி குழாயில் தண்ணீர் பிடிக்க நீண்ட வரிசை இருக்கும். அதன் வால் பழைய முனிசிபல் அலுவலகத்தின் வாசலையும் தாண்டும். வரிசையில் நிற்கிற நேரம் நட்பு மலர்களும் பூக்கும். சாதாரண மக்களின் அவலங்கள் இப்படிப்பட்ட சின்ன சின்ன சந்தோசங்களில்தான் சிறிது ஈடுகட்டப் படுகின்றன. வரிசைகளில் வரும் சண்டைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு நாளின் முக்கியமான நேரங்கள் இவ்வாறு தண்ணீர் வரிசையிலும், குளியல் துவையலுக்கு அலைவதிலுமே கழிந்ததை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. இப்போதும் சாமானிய மக்களின் நேரங்கள் ரேசன், அரசு பொது மருத்துவ மனை வரிசைகளில் கழியத்தானே செய்கின்றன.

அப்போதெல்லாம் குளிப்பதற்கும், துவைப்பதற்கும் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் போய் பம்ப் செட்டிற்கு போவோம். சாணியைக் கரைத்து குழாய் வழியாக ஊற்றி அதை ஸ்டார்ட் செய்தவுடன் முதலில் சாணிக்கரைசல் அழுக்காக வெளியே வரும். முதல் முதலில் தலையை உள்ளே விட கடும் போட்டி இருக்கும். ஆனால் அவ்வளவு தண்ணீர் பற்றாக்குறை என்பதாலோ என்னவோ நிறைய ஆண்கள் தோளில் பெரிய வெண்கலப் பனைகளில் நெடுந்தூரம் தண்ணீர் சுமந்து வருவார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதலில் அடித்த மழை பனிக்கட்டி மழையாக இருந்தது. எங்கள் வீடு ஓட்டு வீடு என்பதால் யாரோ கல்லெறிவது போல சப்தம். ரோடு முழுக்க ஆனந்தப் பெருக்கு. பனிக்கட்டிகளை ஓடி ஓடி அள்ளியவர்கள் குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களும்தான்.

யானை

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்ட நேரங்கள் உண்டு. இரண்டு தடவை மதம் பிடித்து ஓடிய போது சுவாரஸ்யமான சில செய்திகள் உண்டு. ஒரு முறை மேற்கு தொடர்ச்சி மலைப் பக்கம் ஓடிச் சென்றது. இப்படி ஓடிய யானை திரும்ப ஊருக்குள் வந்த போது ஒரு பிள்ளையார் கோயில் அருகில் போய் நின்று விட்டது. நாளிதழ்களில் அது பிள்ளையார் முன்பாக மண்டி போட்டுக் கும்பிட்டதாக செய்தி போட்டார்கள். ( பிள்ளையார் பால் குடிக்கும்போது யானை மண்டி போடுவது நடக்க முடியாத ஒன்றா?). ஒரு முறை பாகன் ஓடுகிற யானை மேல் இருந்து தப்பிக்க மரத்தின் கிளை ஒன்றை பிடித்து தொங்கியதாக பரபரப்பாக பேசிகொண்டார்கள்.

1970 களின் முற்பகுதியில் ஓராண்டு காலம் கோவிலில் யானை இல்லாமல் இருந்ததுண்டு. யானை இல்லாத போது ஏதோ ஒன்றை அக்கோவில் இழந்ததைப் போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.

யானை சாணி போட்டுவிட்டு நகர்ந்தவுடன் சிறுவர்களெல்லாம் ஓடி போய் அதை மிதிப்பார்கள். அதற்கு மருத்துவக் குணம் உண்டு என்று பெரியவர்கள் சொல்வார்கள். யானைக்கு காணிக்கை கொடுத்தால் யானை முடியைப் பிடுங்கித் தருவார்கள். அதைக் கைகளில் கட்டிகொள்வார்கள்.

யானை குளியலுக்காக திருப்பாற்கடல் செல்லும்போது நாங்கள் குடியிருந்த அரங்கநாதர் சன்னதி தெரு வழியாகவே போகும்.

Saturday, 30 October 2010

அரங்கநாதர் சன்னதி தெரு , ஸ்ரீவில்லிபுத்தூர்


தெருவின் நடுவில் நின்று மேற்கே திரும்பிப் பார்த்தால் ஆண்டாள் கோயில் தெரியும்.சின்ன வீதிதான்.ஆண்டாள் கோயிலுக்கு எதிரே உள்ள சன்னதித் தெருவின் நீட்சிதான் இந்தத் தெரு. குறுக்கே கீழ ரத வீதி இருக்கும்.
எங்கள் வீட்டின் இலக்கம் 3 ஆகும். மொத்தமே 10 வீடுகள்தான்.

ஒன்னாம் நம்பர் வீடுதான் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த திரு ரா கிருஷ்ணசாமி அவர்களின்வீடு. இவர் சாத்தூரின் எம் எல் ஏ ஆகவும் இருந்திருக்கிறார். அவர் வீட்டிலும், எதிரே இருந்த அவரது உறவினர் திரு நா.கி வீட்டிலும் மட்டுமே டெலிபோன் உண்டு. பெரிய கறுப்புக் கலர் கருவியில் லோக்கல் கால் பேசுவதற்கே எக்ஸ்சேஞ்ச்மூலமே லிங்க் கிடைக்கிற காலம. அவசரத்திற்கு இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.அந்த ஊரில்
கூட்டத்திற்கு பேச வருகிற காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் அவர் வீட்டுக்கு மரியாதைக்காகவும்,இரவு உணவிற்காகவும் வருவார்கள். ஒருமுறை நடிகர் பிரேம் ஆனந்த் (சிவாஜி படங்களில் 70 களில் நடித்தவர்) வந்தபோது தெருவே போய் வேடிக்கை பார்த்தது. விவசாயிகள் போராட்டத்தின் போது
அவரது வீடு தி மு க வினரால் கல்லெறிக்குள்ளானது. அவரது வீட்டில் இருந்த திரு மூக்கய்யா என்ற பணியாளரை எங்கள் வீட்டில் வைத்துதான் எங்கள் அப்பா பாதுகாத்தார். எங்கள் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த
வேனற்பந்தலை அக்கும்பல் எட்டி உதைத்து உலுக்கியது எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது திருவில்லிபுத்தூரில் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த திரு ராமசந்திரன் நடுநிலையாக இருந்து அப்பிரச்சினையை
சமாளித்ததாக பரவலான பாராட்டு இருந்தது. திரு ரா.கி அவர்கள் அப்போது தனியாக வீடு பார்த்துக் குடி போயிருந்தார். அந்த வீட்டிற்கு கலவரக் கும்பல் போன போது அவர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பினார் என்று மறுநாள் பரபரப்பான பேச்சு ஊருக்குள் இருந்தது. இந்தப் பெரியவர் ராவன்னா கீனாவின் பெயர் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தின் டிரஸ்ட்டிகளின் பட்டியலில் இருந்ததை நான் 2001 ல் அங்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டிற்கு சென்ற போது பார்த்தேன். இவரது பேத்தி பிரேமா அவர்களின் கணவர் திரு வரதராஜுலு பிந்தைய காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தார். நான் பக்கத்தில் இருந்து பார்த்த முதல் அரசியல்வாதி ரா கி தான். எளிமையானவர். யாரும் எப்போதும் சந்திக்க முடியும்.

இரண்டாம் நம்பர் வீட்டு பெரியவர்களை நாங்கள் பெரியப்பா, பெரியம்மா என்றுதான் அழைப்போம்.ஆனால் உறவினர்கள் அலல. அவர்கள் வீட்டில் சண்முகம்,.லட்சுமி,கோமதி என்ற சகோதரிகளும், துரை, சந்திரன், மாரியப்பன் ஆகியோரும் உண்டு. திரு சந்திரன் அவர்களை மட்டும் 30 வருடம் கழித்து 2006 ல் மதுரையில் சந்தித்தேன். அப்போதெல்லாம் திருவில்லிபுத்தூரில் கல்லூரிகள் கிடையாது. சிவகாசிக்கு போகவேண்டும். பாலிடெக்னிக் என்றால் ராஜபாளையம் போக வேண்டும். சந்திரன் சைக்கிளில் தினமும் 10 கி மீ சென்று பாலிடெக்னிக்கில் படித்தார்.அந்தப் பெரியப்பாவின் பேரன்தான் பின்னர் சாத்தூரில் எல் ஐ சி பணிக்கு வந்த திரு நமசிவாயம். காலச் சக்கரத்தின் சுழற்சியில் இப்படிச் சில சந்திப்புகளும் அரிதாக நிகழ்கின்றன.

மூன்றாம் நம்பர் வீடுதான் எங்கள் வீடு. அந்த தெருவில் இருந்த ஒரே ஓட்டு வீடு அதுதான். மின் விசிறி கிடையாது.வெயில் காலத்தில் நீர்க் கடுப்பால் பல நாள் இரவு தவித்திருக்கிறேன்.எடுப்புக் கக்கூசுதான். ( அன்றைக்கு எங்களது கஷ்டம் மட்டும்தான் புரிந்திருந்தது. அருந்ததியனின் வலி தெரியாத அடி முட்டாள்த் தனத்திற்காக இன்றைக்கு வருந்துகிறேன் ). எதிரே மின் விளக்கு வராத வரை எங்கள் வீட்டிற்க்கு எதிர்ப் பகுதியே பொதுக் கழிப்பறையாக பயன்பட்டது. அப்போது தண்ணீர்க் கஷ்டம் ரொம்ப இருந்ததால் வீட்டிற்குள் முனிசிபல் தண்ணீர்க் குழாய்க்க்கான தொட்டி கிணறு மாதிரி ஆழமாக இருக்கும். கீழே இருந்து தண்ணீரைப் பிடித்து யாராவது கொடுத்தால் மேலே யாராவது நின்று வாங்க வேண்டும்,

நான்காவது வீடு ஒரு உதவி வணிக வரி அதிகாரியின் வீடு. அவர் வீட்டிற்க்கு போய்தான் ஆல் இந்திய ரேடியோ நியூஸ் கேட்போம்.
கர கர வென்று கேட்டாலும் சரோஜ் நாராயண சாமியின் குரல் இப்போதும் காதிலேயே ஒலிக்கிறது. அந்த அதிகாரியின் பெயர் நடேசன் என நினைக்கிறேன். அவரது மகன் முருகேசன் மதுரையில் படித்தார். தீபாவளிக்கு நிறைய வெடிகளைப் போடுவதை ஆதங்கத்தோடு வேடிக்கை பார்ப்போம்.

ஐந்தாவது இடம் கோகுலம் என்று போடப்பட்டிருக்கும். காலி இடம். முட்புதர் மண்டியிருக்கும். ஒரு தடவை பெரிய மண்ணுளிப்
பாம்பை பிடித்து எரித்தது நினைவில் இருக்கிறது.

எதிர்ப்பக்கத்தில் ஆதி ரங்கநாதர் கோயில் சின்னதாக இருக்கும். அதற்குப் பக்கத்தில் உள்ள பெரிய காலி இடத்தில் பெரிய விழா நடத்தி கவர்னர் கே கே ஷா ( கலைஞர் அரசை 1976 ல் டிஸ்மிஸ் செய்யப் பரிந்துரைத்தவர் ) அடிக்கல் நாட்டிய கட்டிடம் பின்னர் எழும்பவே இல்லை. அக் காலி இடம் வாயிலாகவே எனது நண்பன் வீட்டிற்க்கு குறுக்கு வழியில் ஓடிப் போவேன்.எனவே அக் கட்டிடம் வராததில் மகிழ்ச்சியே எனக்குள் இருந்தது.

எதிரே பால் பண்ணை. எனவே தண்ணீர் இல்லாத பால் கிடைக்கும். பின்னர் அரசியலில் பிரபலமான திரு தாமரைக்கனி அவர்களின் அம்மா அங்குதான் தனது மாட்டை பால் கறக்க கொண்டு வருவார். தாமரைக்கனி மிக மிக ஒல்லியாக அந்தத் தெருவில் அடிக்கடி நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்.இவ்வளவு பக்கத்தில் இருந்த பால் பண்ணையில் பால் வாங்குவதற்கான கூப்பன் வாங்குவதற்கு 1 கி மீ க்கும் அதிகமாக நடந்து பஸ் ஸ்டாண்ட் தாண்டிச் செல்ல வேண்டும்.

பத்தாம் நம்பர் வீடு எனது நண்பன் சீனிவாசன் வீடு. அவனது அப்பா திரு கோபால்சாமி ( வக்கீல்) ஆவார். எங்கள் தெருவில் அவர் மட்டுமே ஸ்கூட்டர் வைத்திருந்தார்.அவர்கள் வீட்டில் பெரிய தோட்டம் உண்டு. இரண்டு பெரிய அசோகா மரங்கள், துளசி மாடம், தென்னை மரங்கள் எல்லாம் இருந்தது நினைவுக்கு வருகிறது. நாங்கள் அவர்கள் வீட்டில்தான் தண்ணீர் இறைத்துக் கொள்வோம்.இராட்டினத்தில் தண்ணீர் இறைத்து முடிவதற்குள் கைகளில் தோல் உரிந்துவிடும். 31 குடங்கள் எடுத்தால்தான் எங்கள் வீட்டு டிரம், சிமின்ட் தொட்டி உட்பட பாத்திரங்கள் நிரம்பும். பெடல் போடுகிற பேபி கார் ஒன்று அவர்கள் வீட்டில் உண்டு. ஒன்னாவது வகுப்பு மட்டும் என்னோடு படித்த சீனிவாசன் பிறகு ஸ்கூல் மாறி கான்வென்ட் போன போது எனக்கு வருத்தமாக இருந்தது.புது பாசன் சட்டைகளை அவன் போடுவான். நியூஸ் பேப்பர் மாதிரி கொல்லாஜ் செய்த டிசைன் சட்டையை அவன் போட்டபோது அது மாதிரி வேண்டும் என்று அப்பாவிடம் அழுது இருக்கிறேன். ஆனால் கிடைக்கவில்லை. திரு சீனிவாசன் விவசாயக் கல்லூரியில் படித்து தற்போது விவசாய அதிகாரியாக இருக்கிறான். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒருவர்க்கு உதவி கோரி ஒரு கடிதம் எழுதியிருந்தான். நல்ல ஆங்கிலத்தில் இருந்தது அக் கடிதம். இவனது கொள்ளுத் தாத்தாதான் ராவன்னா கீனா அவர்கள்.
எங்கள் தெருவிலேயே சிவகிரி அரண்மனையின் ஒரு பக்கம் அமைந்திருக்கும்.எங்கள் அப்பா அதில்தான் வேலை பார்த்தார்.
அதில் மின்சார வாரிய ஆபீஸ் இருந்தது. மின் கட்டணம் காட்டுகிற பிரிவு எங்கள் தெருவில்தான் இருந்தது.

எங்கள் தெரு முக்கில் ஒரு திறந்த மண்டபம் ஒன்று இருந்தது. ஆனால் அது சிதிலமடைந்ததால் அகற்றப்பட்டது. சொக்கப் பனை எங்கள் தெருவிலேயே நடைபெறும். ஓங்கி உயர்ந்து எரிகிற தீயை இப்போது நினைத்தாலும் அதன் கதகதப்பை உணர முடிகிறது.வழுக்கு மரம், உறியடி எல்லாம் எங்கள் தெருவில்தான் நடைபெறும்.

விவரம் அறிந்த பின்னர் ஐந்தாறு ஆண்டுகளே அத்தெருவில் இருந்தாலும் ஏதோ நீண்ட காலம் இருந்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.



Friday, 29 October 2010

வழியனுப்பிய கோபுரம்



எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எனினும் திருவில்லிபுத்தூரின் கம்பீரமான கோபுரம் மனதிற்கு இன்றைக்கும் நெருக்கமானதாகவே உள்ளது. காரணம் 1976 வரை வாழ்ந்த ஊர் அது.

நான்காவது வரை படித்த நீராவி ஸ்கூல், தண்ணி இல்லாமல் பேட்மிண்டன் மைதானமாக மாறிப்போன சக்கரக் குளம், ஆண்டாள் கோவில் லாலா கடை. திருப்பாற்கடல் பிள்ளையார் கோயில், மடவார்வளாகம் சிவன் கோயில் குளம். சிவகிரி அரண்மனை, ஆண்டாளை பெரியாழ்வார் கண்டெடுத்த துளசி மாடம், ஒன்றரை மணி நேரத்தில் ரதவீதியை சுற்றி வந்துவிடும் செப்புத் தேர், 17 வருசமா ஓடாம இருந்த பெரிய தேர், பென்னிங்க்டன் நூலகம். மாடத் தெரு இந்து நடுநிலைப் பள்ளி, அபி மன்னன் பாத்திரக்கடை, நண்பனின் ஜோதி ஸ்டுடியோ, திருமுக்குளம், சி எம் எஸ் விளையாட்டு மைதானம். சின்ன அண்ணா மா. குருசாமி கல்லறை, சிவகாசி பஸ் நிற்கிற மாதா கோயில், வெங்கடேஸ்வரா தியேட்டர், பெரிய கண்மாய், மேலரத வீதியில் காமராஜர் திறந்து வைத்த ராவன்னா கீனா சிலை, உமையாள் விலாஸ் ஓட்டல், அப்போது ஊருக்கு வெளியே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஜெய கிருஷ்ணா தியேட்டர், ஜெயராம் ட்ரான்ஸ்போர்ட், சிவப்புக் கலரில் ஓடிய
ஸ்டேட் ட்ரான்ஸ்போர்ட் பஸ், வீட்டுக்கு எதிரே இருந்த பால் பண்ணை, பஸ் ஸ்டாண்ட் முக்கில் இருக்கிற பாலசுப்ரமணியவிலாஸ், கோவிந்தம் பிள்ளை கடை, கீழரத வீதியில் அண்ணா படங்களோடு இருந்த சலூன், காய்ச்சலுக்கு மிக்சர் கொடுத்த கம்பௌண்டர் ஆதி, இந்து ஐ ஸ்கூல் முன்பு கீறி கீறிக் கிடைக்கிற கருப்பட்டி அச்சு மிட்டாய், பெரியார்- ராஜாஜி-எம் ஜி சக்ரபாணி- மதியழகன் பேசிய தேரடித் திடல், சுருண்டு சுருண்டு பிரம்மாண்டமாய் கீழரத வீதியில் கிடந்த கைக்குள் அடங்காத பெரிய தேர் வடம், நண்பர்கள் ரமேஷ் பாபு, சீனிவாசன், ராதா சங்கர், சங்கர், மகேஸ்வரன் ....இப்படி நினைவலைகள் அலை மோதுகின்றன.

அந்த ஊரை விட்டு 1976 ஜூன் மாதம் வெளியேறியபோது பஸ் எல்லையைத் தாண்டிய பிறகும் திரும்பிப் பார்த்தபோது தெரிந்தது இந்த கோபுரம்தான்.