Wednesday, 10 November 2010

திருவில்லிபுத்தூர் பெரிய தேர்


திருவாரூர் தேர்தான் தமிழ்நாட்டில் பெரிது என்று திருவில்லிபுத்தூர்காரர்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அப்படித் தங்கள் ஊர்த் தேர் பற்றி பெருமை உண்டு.

17 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேர் 1974 ல் மீண்டும் ஓட ஆரம்பித்தது.( ஓர் ஆண்டு முன் பின் இருக்கும்) முதல் வருடம் மக்கள் மத்தியில் இருந்த ஆர்வம் சொல்லி மாளாது. அந்தத் தேரின் வடத்தை கைகளில் பிடிக்க முடியாது. அவ்வளவு பெரியது. கக்கத்தில் வைத்து கைகளால் தாங்கி இழுக்க வேண்டும். அதைத் தூக்கி இழுப்பதற்குத் தயாராவத ற்கே ஆயிரக்கணக்கானோர் தேவைப்படுவார்கள். தேரின் மேலே முதல் தட்டில் ஒரு பெரிய மத்தளம் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறை இழுக்க வேண்டுமெனும்போதும் அதை ஓங்கி இசைப்பார்கள். எல்லோரும் இழுக்க ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து இழுக்க முடியாது. ஒவ்வொரு முறை இடைவெளி விடும்போதும் தேரின் முன்பக்கம் நின்று இழுப்பவர்கள் கவனமாக வடத்தை உடனே கைகளில் இருந்து விடுவிக்காவிட்டால் உள்ளே இழுத்து சக்கரங்களுக்குள் போட்டு விடும். வடத்தின் கடைசி நுனியைப் பிடித்து நிற்பவர்களும் கைகளில் இருந்து விடுவிக்காவிட்டால் இழுத்து கீழே போட்டுவிடும்.





தேர் ஓடும்போது ரோட்டில் அதன் சக்கரங்கள் பதிந்து ஏற்படுத்துகிற பள்ளம்
மூன்றடிக்கும் மேலே இருக்கும். தெற்கு ரத வீதியில் இருக்கிற தாலுகா அலுவலகத்திற்கு அருகில் தேர் செல்லும்போது அக் கட்டிடத்தில் மோதுவது போல் போய் நின்றது. மேலரத வீதி திருப்பத்தில் தேரின் கலசம் மேலே இருந்து விழுந்துவிட்டது. 3 பேர் இறந்து போனார்கள். இவ் விபத்தின் போது நான் அந்த இடத்தில் இருந்தேன். ஒன்றரை மாதம் அங்கேயே தேர் நின்று போனது. அதற்குப் பிறகு கனமான கலசத்திற்குப் பதிலாக வெறும் மூங்கில்களிலான வர்ணம் பூசப்பட்ட கலசமே மேலே வைக்கப் பட்டது. இப்படி தேர் நிலைக்கு வந்து சேர முதல் ஆண்டு 81 நாட்கள் ஆனது.

அடுத்த ஆண்டு 12 நாட்கள் ஆனதென்று நினைக்கிறேன். மூன்றாமாண்டு தேர்த் திருவிழாவுக்கு நான் அந்த ஊரில் இருக்கவில்லை. மூன்று நாளில் தேர் நிலைக்கு வந்து விட்டது என்று நாளிதழ்களில் படித்தபோது வியப்பாக இருந்தது.

தேர் நகர்வதற்கு பினனால் பெரிய அடிக் கட்டை போட்டு நெம்புவார்கள். சக்கரத்தின் முன்பக்கம் பாதையை நெறிப்படுத்த சக்கை போடுவார்கள். ஒன்றரை ஆளின் உயரத்திற்கு மேலே இருக்கிற சக்கரங்கள் நகரும்போது கம்பீரமாய் காட்சியளிக்கும். அடிக்கட்டையையும், சக்கையையும் யார் போடுவார்கள், தேரின் மேலே சாமியோடு சாமியாய் யார் வர இயலும் என்றெல்லாம் அதிகம் நான் சிந்தித்ததில்லை.

தேர் இழுக்க ஆட்கள் வேண்டுமென்பதால் வீதிகளில் மைக்கில் அறிவிப்பார்கள். மாதக்கணக்கில் ஓடிய முதலாண்டில் கேட்க வேண்டுமா? தேர் இழுக்கிற அன்றைக்கு இந்து உயர்நிலை,நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுவிடுவார்கள். பல பேர் கிரிக்கெட் விளையாட போய் விடுவார்கள். கூட்டம் சேராமல் திரும்ப திரும்ப அறிவிப்பு செய்யப்பட்ட நாட்களும் உண்டு.

தேர்த் திருவிழாவுக்கு வெளியூரிலிருந்து எல்லா வீடுகளுக்கும் நண்பர்களும், உறவினர்களும் வருவார்கள். ஆண்டாள் கோவிலில் நடைபெறுகிற 10 நாள் விழாவிற்கும் வெளியூர் கூட்டம் நிறைய வரும். கோவில் வாசலில் ஒரு நாள் யானை ஒரு காலைத் தூக்கிக்கொண்டு மாற்று திறனாளி போல நடக்கும். ( மாற்று திறனாளி என்ற சொல்லாடலை தி ஹிந்து நாளிதழ் பத்திரிக்கையாளர் திரு கரிமேல்லா சுப்ரமணியன் ஒரு நிகழ்ச்சியில் மறுதலித்தார். அவர் கண்பார்வை அற்றவர்) தேர்க் கதைக்கு மீண்டும் வருகிறேன்.

தேர் இழுப்பதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. மழை வருவதற்காக என்ற காரணம் மக்களின் மனத்தைக் கவ்வியிருந்தது. பட்டர் ஒருவரின் கனவில் ரங்கமன்னார் வந்து சொன்னார் என்ற செய்தி ஒன்றும் உலா வந்தது. இதே காலத்தில் திருவண்ணாமலையில் ( ஸ்ரீவிக்கு அருகே) ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு இயேசு காட்சியளித்ததாக ஒரு பரபரப்பு ஏற்பட்டது. நம்பிக்கைகளின் அடிப்படையிலான இச்செய்திகள் புதிய மத நிகழ்ச்சிகளுக்கு வழிவகுத்தன. கிறித்தவர்கள் வழிபாடு இடமாக அக் காட்சியிடம் மாற்றப்பட்டது.

ஓடாமல் இருந்த திருவாரூர் தேரும் பின்னாளில் ஓடுவதற்கு வழி வகுக்கப் பட்டது. பட்டர் கனவில் ரங்கமன்னார் வந்தாரோ இல்லையோ திருவில்லிபுத்தூர் தேர் அசைகிற அழகு இன்னும் என் கண்களில் நிற்கிறது.

2 comments:

  1. நல்ல பதிவு.
    தற்போது தேரை புல்டோசர் வைத்து ஒரே நாளில் இழுத்து கொண்டு வந்து விடுகிறார்கள்.
    நன்றி.

    ReplyDelete
  2. மிக அருமை. நன்றி. ஆண்டாள் தேர் எங்கள் வீட்டு வாசலில் ஒரு தடவை நின்றுவிட்டது.
    தேரின் கயிறுகளில் ஏறி விளையாடினது நினைவுக்கு வருகிறது.
    தேரா அது!
    தெய்வமே ஆடிவருவதுபோல் என்ன ஒரு அழகு.
    நானும் வேறேந்ததேரையும் ஒத்துக் கொள்ள மாட்டேன்:)--

    எங்கள் தந்தை ஒரு குளத்தில் டென்னிஸ் விளையாடப் போவார். அது எந்தக் குளம் என்று நினைவில்லை.
    ஸ்ரீவில்லிபுத்தூரைப் பற்றிய விஷயங்களைத் தந்ததற்கு மிகவும் நன்றி

    ReplyDelete