Tuesday 2 November 2010

சக்கரக் குளம்

நான்கு பக்கமும் படித்துறையுடன் அழகாக இருந்த குளம். தண்ணீர் நிரம்பிப்
பார்த்த சந்தர்ப்பங்கள் மிக மிக அரிது. ஒரு பக்க படித்துறை பழைய முனிசிபல்
அலுவலகக் கட்டிடத்தை ஒட்டி இருந்ததால் அதை யாரும் பயன்படுத்த
மாட்டார்கள். மேற்குப் பக்கப் படித்துறையும் மண் மேவி மூடப்பட்டுவிட்டது.

திருவில்லிப்புத்தூருக்குள் பெரிய விளையாட்டு மைதானங்கள் கிடையாது.
நகரின் மையத்திலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம்
கூட ஊருக்கு வெளியே சி எம் எஸ் பள்ளிக்கூடத்தின் அருகே இருந்தது.(இப்பவும்
அங்கேதானா?) எனவே தண்ணியில்லா சக்கரக்குளம் கிரிக்கெட், ஹாக்கி விளையாடுகிறமைதானமாக மாறிவிட்டது. ஹாக்கி ஸ்டிக் வாங்க வசதி இல்லாததால் அதைப் போல வளைந்த விறகுக் கட்டைகளை வைத்து விளையாடுவார்கள். கிரிக்கெட்டுக்கும் ஸ்டம்ப்ஸ்க்கு ஒல்லியான விறகுக் கட்டைகளைத்தான் நட்டு வைப்பார்கள். சக்கரக் குளத்திற்கு கிழக்குப் பக்கம் முக்கு வீட்டு ரகு என்பவர் நலல கிரிக்கெட் பிளேயர். என்னுடைய அண்ணன் நலல ஹாக்கி பிளேயர். அவர் சி எம் எஸ் ஸ்கூலில்
அந்த ஸ்கூல் டீமில் இருந்தவர். நானும் ஓரளவு கிரிக்கெட்
விளையாடுவேன். சக்கரக் குளத்தின் நடுவில் பெரிய சதுரமான மேடு ஒன்று
இருக்கும். அதற்கு மேலே உட்கார்ந்து விளையாட்டை வேடிக்கை பார்ப்போம்.

பிறகு இரண்டு ஆண்டுகள் அது பால் பாட்மிட்டன் மைதானமாக மாறியது.
மின்சார வாரியத்தில் பணி புரிந்த திரு லெட்சுமணன் அருமையாக விளையாடுவார்.அவர் அடர்த்தியான மீசை வைத்திருப்பார். ஆண்டாள் கோவிலுக்குள் ஸ்வீட் ஸ்டால் வைத்திருந்த லாலாவும் நல்லா விளையாடுபவர். ராஜா ராம் என்ற ப்ளேயரும் நினைவில் நிற்பவர். அங்கு ஒரு மாநில அளவிலான போட்டி நடைபெற்றது.இறுதிப் போட்டியில் கடைசி பாலில் ராஜாராம் ஜோடியின் தலைவிதியே மாறி தோற்று விட்டார்கள். டபுள்ஸ் மட்டுமின்றி பைவ்ஸ் விளையாடுவதையும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்திருக்கிறேன்.
சக்கரக்குளத்திற்கு வடக்குப் பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் மதுரை அழகர் நகரில் பின்னர் குடியிருந்தார். சினிமா விட்டால் வெங்கடேஸ்வரா தியேட்டரில் இருந்து மக்கள் இந்த வழியாகத்தான் அதிகமாக வருவார்கள்.

சக்கரக் குளத்தின் மேற்கு-வடக்கு முனையில்தான் போஸ்ட் ஆபீஸ் இருக்கும்.
வடக்கு படித்துறை எதிர் வீட்டில் ரெங்கசாமி என்பவர் வீடு இருந்த ஞாபகம் உள்ளது.வடக்குப் பக்கத் தெரு வழியாக நேரே சென்றால் வருகிற தெரு நம்பி நாயுடு தெரு ஆகும். அத்தெருவின் முனையில் உள்ள கடைக்கு சென்றுதான் காலையில் சட்டினிக்கு தேங்காய்ச் சில்லு வாங்குவேன். ஐந்து பைசாவுக்கு சின்ன சின்னதாய் ஐந்து சில்லு கிடைக்கும்.

சிவகிரி அரண்மனைக்கு பக்கத்தில் இந்தக் குளம் இருப்பதால் அந்தக் காலத்தில்
படை வீரர்கள் இங்கேதான் குளித்திருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

2 comments:

  1. சக்கரக்குளத்தை குப்பை தொட்டி குப்பைக் குளமாக மாற்றி விட்டார்கள்.
    நீங்கள் நன்கு எழுதுகிறீர்கள். தமிழ்மணத்திலும் திரட்டியிலும் இணைத்தால் நிறைய நண்பர்கள் படிப்பார்கள். உங்களது நட்பு வட்டமும் விரியும். முயற்சி செய்யுங்கள்.
    உங்கள் எழுத்தை அறிமுகப்படுத்திய நண்பருக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. படித்துறையும் மண் மேவி மூடப்பட்டுவிட்டது.//

    நினைக்கவே கஷ்டமான இருக்கிறது.
    பகிர்வுகள் அருமை.

    ReplyDelete