Friday, 12 November 2010

உமையாள் விலாஸ்

திருவில்லிபுத்தூரின் அன்றைய பிரபலமான ஓட்டல்களில் ஒன்று. வடக்கு ரத வீதியில் அமைந்திருந்த அது மாலை நேரம் நிரம்பி வழியும். அதை நடத்திய குடும்பத்துப் பையன் பேச்சியப்பன் எனது வகுப்பறைத் தோழன். இரண்டாண்டுகளுக்கு முன்பு அவனைத் தேடிச் சென்று தேரடி தெருவில் சந்தித்துப் பேசிவிட்டு வந்தேன்.

வடக்கு ரத வீதி உமையாள் விலாஸ் மூடப்பட்ட பின்னர் கீழ ரத வீதியில் சிறிது காலம் மின் வரியா அலுவலகத்திற்கு எதிரே இருந்தது. பின்னர் டெலிபோன் இணைப்பகத்தில் இருந்து வெங்கடேஸ்வரா தியேட்டர் செல்கிற தெருவின் இடது முனையில் இருந்தது.

அந்தக் காலத்தில் சுவையான உணவிற்கு பலரும் தேடிச் சென்ற ஓட்டல் அது.

இந்து உயர்நிலைப் பள்ளி மைதானம்

பள்ளிக்கூடம் ஆண்டாள் கோவில் பக்கத்தில் இருந்தாலும் விளையாட்டு மைதானம் 3 கி மீ தூரத்தில் சி எம் எஸ் பள்ளிக்கு அருகில் இருந்தது. சி எம் எஸ் மைதானமும், இதுவும் ஒரு கம்பி வேலியால் பிரிக்கப்பட்டு இருக்கும். வாரம் ஒரு நாள் மைதானத்திற்கு செல்லவேண்டும்.

மேலரத வீதி, நாடகசாலைத் தெரு, திருமுக்குளம் வழியாக செல்லவேண்டும். நாடக சாலைத் தெரு பார்க்க அழகாக இருக்கும். முதல் முதலில் கனரா வங்கி கிளை இத்தெருவில் வந்த நினைவு உள்ளது. வடக்கு மாட வீதியில் ஸ்டேட் வங்கி இருந்தது. திருமுக்குளத்திற்கு சேருகிற இடத்தில் மலைச் சாலை போல செங்குத்தாக இருக்கும். திருமுக்குளமும் எழில் மிக்கது. அக்குளத்திற்குள் சிறிய சதுரமாக ஒரு குளம் இருக்கும். அதற்குள் சுழல் இருக்கும் என்பதால் அதில் இறங்க எவரும் யோசிப்பார்கள். கொஞ்சம் தாண்டினால் சி எம் எஸ் இணைப்புக் கட்டிடம் ஒன்று. கூடை பந்து மைதானம் உண்டு. இன்னும் கடந்தால் இடது பக்கம் ஒரு கிறித்தவ மிசனரி கட்டிடத்தின் நீண்ட காம்பவுண்டு இருக்கும்.

அந்த ஊரில் ஹாக்கி பலரும் விரும்புகிற விளையாட்டு. கபடி உண்டு. கிரிக்கெட் உண்டென்றாலும் இன்று இருக்கிற அளவுக்கு அதன் ஆதிக்கம் அப்போது கிடையாது. இரண்டு பள்ளிகளின் நூற்றுக் கணக்கான மாணவர்கள் விளையாடுகிற காட்சிகள் கண் கொள்ளதவைதான். காக்கி-வெள்ளையில் இந்து பள்ளி மாணவர்களும், ஊதா-வெள்ளையில் சி எம் எஸ் மாணவர்களும் மைதானத்தை கலக்குவார்கள்.

Wednesday, 10 November 2010

திருவில்லிபுத்தூர் பெரிய தேர்


திருவாரூர் தேர்தான் தமிழ்நாட்டில் பெரிது என்று திருவில்லிபுத்தூர்காரர்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அப்படித் தங்கள் ஊர்த் தேர் பற்றி பெருமை உண்டு.

17 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேர் 1974 ல் மீண்டும் ஓட ஆரம்பித்தது.( ஓர் ஆண்டு முன் பின் இருக்கும்) முதல் வருடம் மக்கள் மத்தியில் இருந்த ஆர்வம் சொல்லி மாளாது. அந்தத் தேரின் வடத்தை கைகளில் பிடிக்க முடியாது. அவ்வளவு பெரியது. கக்கத்தில் வைத்து கைகளால் தாங்கி இழுக்க வேண்டும். அதைத் தூக்கி இழுப்பதற்குத் தயாராவத ற்கே ஆயிரக்கணக்கானோர் தேவைப்படுவார்கள். தேரின் மேலே முதல் தட்டில் ஒரு பெரிய மத்தளம் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறை இழுக்க வேண்டுமெனும்போதும் அதை ஓங்கி இசைப்பார்கள். எல்லோரும் இழுக்க ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து இழுக்க முடியாது. ஒவ்வொரு முறை இடைவெளி விடும்போதும் தேரின் முன்பக்கம் நின்று இழுப்பவர்கள் கவனமாக வடத்தை உடனே கைகளில் இருந்து விடுவிக்காவிட்டால் உள்ளே இழுத்து சக்கரங்களுக்குள் போட்டு விடும். வடத்தின் கடைசி நுனியைப் பிடித்து நிற்பவர்களும் கைகளில் இருந்து விடுவிக்காவிட்டால் இழுத்து கீழே போட்டுவிடும்.

தேர் ஓடும்போது ரோட்டில் அதன் சக்கரங்கள் பதிந்து ஏற்படுத்துகிற பள்ளம்
மூன்றடிக்கும் மேலே இருக்கும். தெற்கு ரத வீதியில் இருக்கிற தாலுகா அலுவலகத்திற்கு அருகில் தேர் செல்லும்போது அக் கட்டிடத்தில் மோதுவது போல் போய் நின்றது. மேலரத வீதி திருப்பத்தில் தேரின் கலசம் மேலே இருந்து விழுந்துவிட்டது. 3 பேர் இறந்து போனார்கள். இவ் விபத்தின் போது நான் அந்த இடத்தில் இருந்தேன். ஒன்றரை மாதம் அங்கேயே தேர் நின்று போனது. அதற்குப் பிறகு கனமான கலசத்திற்குப் பதிலாக வெறும் மூங்கில்களிலான வர்ணம் பூசப்பட்ட கலசமே மேலே வைக்கப் பட்டது. இப்படி தேர் நிலைக்கு வந்து சேர முதல் ஆண்டு 81 நாட்கள் ஆனது.

அடுத்த ஆண்டு 12 நாட்கள் ஆனதென்று நினைக்கிறேன். மூன்றாமாண்டு தேர்த் திருவிழாவுக்கு நான் அந்த ஊரில் இருக்கவில்லை. மூன்று நாளில் தேர் நிலைக்கு வந்து விட்டது என்று நாளிதழ்களில் படித்தபோது வியப்பாக இருந்தது.

தேர் நகர்வதற்கு பினனால் பெரிய அடிக் கட்டை போட்டு நெம்புவார்கள். சக்கரத்தின் முன்பக்கம் பாதையை நெறிப்படுத்த சக்கை போடுவார்கள். ஒன்றரை ஆளின் உயரத்திற்கு மேலே இருக்கிற சக்கரங்கள் நகரும்போது கம்பீரமாய் காட்சியளிக்கும். அடிக்கட்டையையும், சக்கையையும் யார் போடுவார்கள், தேரின் மேலே சாமியோடு சாமியாய் யார் வர இயலும் என்றெல்லாம் அதிகம் நான் சிந்தித்ததில்லை.

தேர் இழுக்க ஆட்கள் வேண்டுமென்பதால் வீதிகளில் மைக்கில் அறிவிப்பார்கள். மாதக்கணக்கில் ஓடிய முதலாண்டில் கேட்க வேண்டுமா? தேர் இழுக்கிற அன்றைக்கு இந்து உயர்நிலை,நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுவிடுவார்கள். பல பேர் கிரிக்கெட் விளையாட போய் விடுவார்கள். கூட்டம் சேராமல் திரும்ப திரும்ப அறிவிப்பு செய்யப்பட்ட நாட்களும் உண்டு.

தேர்த் திருவிழாவுக்கு வெளியூரிலிருந்து எல்லா வீடுகளுக்கும் நண்பர்களும், உறவினர்களும் வருவார்கள். ஆண்டாள் கோவிலில் நடைபெறுகிற 10 நாள் விழாவிற்கும் வெளியூர் கூட்டம் நிறைய வரும். கோவில் வாசலில் ஒரு நாள் யானை ஒரு காலைத் தூக்கிக்கொண்டு மாற்று திறனாளி போல நடக்கும். ( மாற்று திறனாளி என்ற சொல்லாடலை தி ஹிந்து நாளிதழ் பத்திரிக்கையாளர் திரு கரிமேல்லா சுப்ரமணியன் ஒரு நிகழ்ச்சியில் மறுதலித்தார். அவர் கண்பார்வை அற்றவர்) தேர்க் கதைக்கு மீண்டும் வருகிறேன்.

தேர் இழுப்பதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. மழை வருவதற்காக என்ற காரணம் மக்களின் மனத்தைக் கவ்வியிருந்தது. பட்டர் ஒருவரின் கனவில் ரங்கமன்னார் வந்து சொன்னார் என்ற செய்தி ஒன்றும் உலா வந்தது. இதே காலத்தில் திருவண்ணாமலையில் ( ஸ்ரீவிக்கு அருகே) ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு இயேசு காட்சியளித்ததாக ஒரு பரபரப்பு ஏற்பட்டது. நம்பிக்கைகளின் அடிப்படையிலான இச்செய்திகள் புதிய மத நிகழ்ச்சிகளுக்கு வழிவகுத்தன. கிறித்தவர்கள் வழிபாடு இடமாக அக் காட்சியிடம் மாற்றப்பட்டது.

ஓடாமல் இருந்த திருவாரூர் தேரும் பின்னாளில் ஓடுவதற்கு வழி வகுக்கப் பட்டது. பட்டர் கனவில் ரங்கமன்னார் வந்தாரோ இல்லையோ திருவில்லிபுத்தூர் தேர் அசைகிற அழகு இன்னும் என் கண்களில் நிற்கிறது.

Tuesday, 9 November 2010

தண்ணீர் ... தண்ணீர்..courtesy: kisanbachao.blogspot.com

கோமல் சுவாமிநாதனின் அத்திப் பட்டியை திரையில் பார்த்த போது எனக்கு அது ஒன்றும் வியப்பாக இல்லை. ஏனெனில் திருவில்லிபுதூரின் தண்ணீர் பற்றாக்குறை பல்லாண்டுப் பிரச்சினையாக இருந்தது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக மழையே இல்லை என்று எனக்கு நினைவில் இருக்கிற காலம் தொட்டுப் பேசிக் கேட்டிருக்கிறேன். திருவில்லிபுதூரின் பெரிய தேர் 1956 லிருந்து ஓடாமல் இருந்ததுதான் காரணம் என்று பரவலான நம்பிக்கை உருவாக்கப்பட்டது. ஒரு பட்டரின் கனவில் ரங்க மன்னார் வந்து சொன்னதாக ஒரு செய்தியும் உலா வந்தது. இப் பின்புலத்தில்தான் பெரிய தேர் உலா மீண்டும் துவங்கியது.

இதே காலத்தில் தமிழகம் முழுக்க மழை பெய்யாமல் கிருபானந்த வாரியார், குன்னக்குடி வைத்யநாதன் போன்றோர் சென்னை கடற்க் கரையில் பிரார்த்தனை, இசை ஆகியவற்றை அரங்கேற்றியது நினைவில் உள்ளது. சோவியத் யூனியன் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு செயற்கை மழைக்கான முயற்சிகளும் செய்யப்பட்டன. பஞ்சமும் சேர்ந்து கொண்டது. அப்போது திருவில்லிபுத்தூர் இருந்த ராமநாதபுரம் மாவட்டம்தான் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். மக்கள் கப்பைக் கிழங்கை உணவாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எம் ஜி ஆர் திறந்த கஞ்சித் தொட்டிகள் மிகப் பெரிய அரசியல் ஆயுதங்களாக மாறின. கலைஞரின் அன்றைய ஆட்சியின் மிகப் பெரிய களங்கமாக அது கருதப்பட்டது.எங்களைப் போன்ற இல்லங்களிலும் அரிசிக்குப் பதிலாக கேப்பை (கேழ்வரகு), கோதுமை ஆகியவற்றுக்கு நகர வேண்டியிருந்தது.

அப்போது வீடுகளில் நகராட்சி குடிநீர் ஒரு நாளைக்கு ஐந்தாறு குடங்கள் மட்டுமே வரும். அதுவும் குழாய் மட்டத்தை இறக்கிக் கொண்டே சென்றால்தான் தண்ணீர் கிடைக்கும். போட்டி போட்டுகொண்டு பக்கத்து பக்கத்து வீட்டில் குழாய் இறங்கிக் கொண்டே போகும். பற்றாக்குறை எப்படி பொறாமைகளை உருவாக்கும், மனித உறவுகளை பாதிக்கும் என்பதை அனுபவ ரீதியாகக் கண்டிருக்கிறேன்.

அரங்கநாதர் சன்னதி தெருவும்,சக்கரைக்குளமும் சந்திக்கிற முனையில் ஒரு அடி குழாய் போடப்பட்டது. போர் இயந்திரம் உள்ளே துளை போட துளை போட தண்ணீர் பீச்சியடிப்பதைப் பார்க்க நூற்றுக் கணக்கானோர் திரண்டு நின்றதும், ஆரவாரம் செய்ததும் மறக்க இயலாது.அந்த அடி குழாயில் தண்ணீர் பிடிக்க நீண்ட வரிசை இருக்கும். அதன் வால் பழைய முனிசிபல் அலுவலகத்தின் வாசலையும் தாண்டும். வரிசையில் நிற்கிற நேரம் நட்பு மலர்களும் பூக்கும். சாதாரண மக்களின் அவலங்கள் இப்படிப்பட்ட சின்ன சின்ன சந்தோசங்களில்தான் சிறிது ஈடுகட்டப் படுகின்றன. வரிசைகளில் வரும் சண்டைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு நாளின் முக்கியமான நேரங்கள் இவ்வாறு தண்ணீர் வரிசையிலும், குளியல் துவையலுக்கு அலைவதிலுமே கழிந்ததை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. இப்போதும் சாமானிய மக்களின் நேரங்கள் ரேசன், அரசு பொது மருத்துவ மனை வரிசைகளில் கழியத்தானே செய்கின்றன.

அப்போதெல்லாம் குளிப்பதற்கும், துவைப்பதற்கும் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் போய் பம்ப் செட்டிற்கு போவோம். சாணியைக் கரைத்து குழாய் வழியாக ஊற்றி அதை ஸ்டார்ட் செய்தவுடன் முதலில் சாணிக்கரைசல் அழுக்காக வெளியே வரும். முதல் முதலில் தலையை உள்ளே விட கடும் போட்டி இருக்கும். ஆனால் அவ்வளவு தண்ணீர் பற்றாக்குறை என்பதாலோ என்னவோ நிறைய ஆண்கள் தோளில் பெரிய வெண்கலப் பனைகளில் நெடுந்தூரம் தண்ணீர் சுமந்து வருவார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதலில் அடித்த மழை பனிக்கட்டி மழையாக இருந்தது. எங்கள் வீடு ஓட்டு வீடு என்பதால் யாரோ கல்லெறிவது போல சப்தம். ரோடு முழுக்க ஆனந்தப் பெருக்கு. பனிக்கட்டிகளை ஓடி ஓடி அள்ளியவர்கள் குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களும்தான்.

யானை

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்ட நேரங்கள் உண்டு. இரண்டு தடவை மதம் பிடித்து ஓடிய போது சுவாரஸ்யமான சில செய்திகள் உண்டு. ஒரு முறை மேற்கு தொடர்ச்சி மலைப் பக்கம் ஓடிச் சென்றது. இப்படி ஓடிய யானை திரும்ப ஊருக்குள் வந்த போது ஒரு பிள்ளையார் கோயில் அருகில் போய் நின்று விட்டது. நாளிதழ்களில் அது பிள்ளையார் முன்பாக மண்டி போட்டுக் கும்பிட்டதாக செய்தி போட்டார்கள். ( பிள்ளையார் பால் குடிக்கும்போது யானை மண்டி போடுவது நடக்க முடியாத ஒன்றா?). ஒரு முறை பாகன் ஓடுகிற யானை மேல் இருந்து தப்பிக்க மரத்தின் கிளை ஒன்றை பிடித்து தொங்கியதாக பரபரப்பாக பேசிகொண்டார்கள்.

1970 களின் முற்பகுதியில் ஓராண்டு காலம் கோவிலில் யானை இல்லாமல் இருந்ததுண்டு. யானை இல்லாத போது ஏதோ ஒன்றை அக்கோவில் இழந்ததைப் போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.

யானை சாணி போட்டுவிட்டு நகர்ந்தவுடன் சிறுவர்களெல்லாம் ஓடி போய் அதை மிதிப்பார்கள். அதற்கு மருத்துவக் குணம் உண்டு என்று பெரியவர்கள் சொல்வார்கள். யானைக்கு காணிக்கை கொடுத்தால் யானை முடியைப் பிடுங்கித் தருவார்கள். அதைக் கைகளில் கட்டிகொள்வார்கள்.

யானை குளியலுக்காக திருப்பாற்கடல் செல்லும்போது நாங்கள் குடியிருந்த அரங்கநாதர் சன்னதி தெரு வழியாகவே போகும்.

Sunday, 7 November 2010

ஊருக்கு ஏனிந்த பெயரு ?

ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயருக்கு என்ன காரணம் ?

ஒரு காலத்தில் பாம்புப் புற்றுகளாய் இருந்த காட்டைத் திருத்தி இந்த ஊர் அமைக்கப்பட்டது. புத்தூருக்கு விளக்கம் கிடைத்து விட்டதா?

இந்த ஊரை நிர்மாணித்த மன்னனின் பெயர் வில்லி. அதனால் வில்லியும் பெயரோடு ஒட்டிக் கொண்டதாம்.

ஸ்ரீ எப்படி வந்தது என்கிறிர்களா? இந்த ஊரின் பெருமையான திருப்பாவையைப் படைத்த ஆண்டாள் அவதரித்ததால் ஸ்ரீ என்ற மரியாதை அடை மொழி சேர்ந்து கொண்டதாம்.

வரலாற்றில் திருவில்லிபுத்தூர் - திரு ஏ. பாக்கியம் கட்டுரையில்

இப்போரில் பூலித்தேவன் வெற்றிபெற்று களக்காட்டை தக்கவைத்துக் கொண்டான்.

இவ்வெற்றி பூலித்தேவனுக்கு புதுத்தெம்பைக் கொடுத்தது. தனது பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்த எண்ணி திருவில்லிபுத்தூர் கோட்டையை கைப்பற்றத் திட்டமிட்டான். மதுரைக்கும் நெல்லைக்கும் இடையிலே இருப்பதால் இதன் இருப்பு முக்கியமாகப் பட்டது. இக்கோட்டை ஆற்காடு நவாபுவின் தம்பி ரஹீம் மேற்பார்வையில் 3000 சிப்பாய்களுடனும், 30 கும்பினியர்களின் துணைப்படையுடன் பாதுகாப்பாக இருந்தது. நேரம் பார்த்து பல ஆயிரம் காலாட்படையுடனும் 1000 குதிரைப்டையுடனும் தாக்குதலைத் தொடுத்து கோட்டையை கைப்பற்றினான். ரஹீம் விரட்டி அடிக்கப்பட்டான். இந்த வெற்றி கும்பினியர்களையும், நவாப்பையும் வெறுத்த பல பாளையக்காரர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. பூலித்தேவனுக்கோ வெற்றியின் வேகம் அடுத்த இலக்கைத் தேடியது. மாபுசூக்கான் தங்கியிருந்த திருநெல்வேலியைக் கைப்பற்றி மாபுசூக்கானை ஒழித்துவிட திட்டமிட்டான்.

Saturday, 6 November 2010

சின்ன அண்ணா மா குருசாமி

இவர் திருவில்லிபுத்தூரின் நகர்மன்றத் தலைவராக மிகக் குறுகிய காலம் இருந்தார். அவருக்கு முன்னாள் காங்கிரஸ்தான் அப்பதவியில் நீண்ட காலம் இருந்து வந்திருந்தது.திரு பாலையா (அவரது பதிவேட்டு பெயர் வேறு என நினைக்கிறேன்) என்பவர் 18 ஆண்டுகளாக நகர்மன்றத் தலைவர் ஆக இருந்தார்.அவரும் மக்களிடம் மதிப்பைப் பெற்றவராகவே இருந்தார்.

பின்னர் தி மு க வின் சார்பில் சேர்மன் ஆக வந்தவர்தான் மா குருசாமி. குறுகிய காலத்தில் மக்களின் பேரன்பைப் பெற்றவராக திகழ்ந்தார். அவர் ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக மறைந்து விட்டார். அன்னாரை இன்றைக்கு எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் எனத் தெரியாது. அவரின் சமாதி சிவகாசி ரோட்டில் இருக்கிறது.

பேரறிஞர் அண்ணா முதல்வராக கொஞ்ச காலம்தான் இருந்தார். இவரும் அப்படிதான். திருவில்லிபுத்தூர் நகரம் அவரை சின்ன அண்ணா என்று அழைத்தது.

Friday, 5 November 2010

ULAGAM SUTRUM VAALIBAN


உலகம் சுற்றும் வாலிபன்

இராஜ பாளையம் தனலட்சுமி தியேட்டரில் போய் உலகம் சுற்றும் வாலிபன் பார்த்தேன். புதுப் படங்கள் முதலில் விருதுநகர், இரண்டாவது சுற்றில் ராஜபாளையம், மூன்றாவது சுற்றில்தான் திருவில்லிபுத்தூருக்கு வரும். உலகம் சுற்றும் வாலிபன் சென்னையில் தேவி பாரடைஸ், உமா , அகஸ்தியா - மதுரை மீனாக்ஷி - திண்டுக்கல் NVGB- ராமநாதபுரம் சண்முகா-கம்பம் கிரேசென்ட்-பழனி ஓம் சண்முகா ஆகிய தியேட்டர்களில் 1973 மே மாதம் 12 அன்று திரைக்கு கொண்டு வரப்பட்டது. மே மாதம் 20 ஆம் தேதி தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாள். அன்றுதான் அ தி மு க பிறந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல். திண்டுக்கல் இடைத் தேர்தல். நான்கு முனைப் போட்டி. பெருந்தலைவர் காமராஜரும் காலத்தில் ஸ்தாபன காங்கிரசுக்காக பிரச்சாரக் களத்தில் இருந்தார். அந்நேரம் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானதால் அது அரசியல் சர்ச்சையை தூண்டி விட்டது. அதை வெளிவர விடாமல் தடுக்க முயற்சிகள் இருந்தன என்ற குற்றச் சாட்டுக்களும் பரபரப்பை உண்டாக்கியது. விருதுநகர் நாராயணசாமி தியேட்டரில் போய் அதை பார்க்க துடியாய்த் துடித்தும் முடியவில்லை. பிறகு ராஜபாளையத்தில் போய்ப் பார்த்த பிறகுதான் ஆறுதலாக இருந்தது. திண்டுக்கல் இடைத் தேர்தலில் அ தி மு க 260930 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. ஸ்தாபன காங்கிரஸ் 119032 வாக்குகளே வாங்கியது. ஆளும் தி மு க மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அப்பாவுடன் வேலை பார்த்த மம்சாபுரத்தைச் சேர்ந்த திரு. சண்முகசுந்தரம் என்பவரோடு தேர்தல் பந்தயம் போட்டு ரூ 5 க்கு ஒரு சில்வர் தட்டு வாங்கிக்கொடுத்தார். மிக மிக அன்பாக என்னிடம் இருந்தவர். அவர் நாங்கள் மதுரையில் குடி மாற்றிய பிறகு சில ஆண்டுகளுக்குள் மறைந்து விட்டார்.

உலகம் சுற்றும் வாலிபனின் வசூல் விவரங்கள், ஓடிய நாட்கள் ஆகியன கூட அரசியலில் உன்னிப்பாக பார்க்கப்பட்டன. மதுரையில் 217 நாட்கள் ஓடியது. விருதுநகரில் 50 நாட்கள் ஓடியதாக நினைவு. அன்றைக்கு வந்த எல்லோருக்கும் ஒரு மஞ்சள் நோட்டு ஒன்றில் வசூல் விவரங்களை பின் அட்டையில் போட்டுக் கொடுத்தார்கள்.

தமிழக அரசியலில் திரை உலகத்தின் தாக்கம் வெகுவாக இருந்ததை நெருக்கமாக கவனித்திருக்கிறேன்.

Thursday, 4 November 2010

அப்பாவின் மூன்று நண்பர்கள்

அப்பாவின் மூன்று நண்பர்களை மறக்க இயலாது. அவர்களில் ஒருவர் மறைந்து விட்டார்.

மறைந்தவர் பெயர் திரு வெங்கடாசலம். குண்டாக இருப்பார். எங்கள் வீட்டு உள்திண்ணையில் அவர், திரு முத்தையா . எங்கள் அப்பா மூவரும் அமர்ந்து மணிக் கணக்காகப் பேசுவார்கள். வெங்கடாசலம் நகைச் சுவையாகப் பேசுவார். அவர் வரும்போது அவரின் வளர்ப்பு நாய் 'ப்ளாக்கி' கூடவே வரும். அவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி ஒன்று உண்டு. ஒரு முறை நண்பர்களோடு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு போய் வந்தார். நண்பர்களெல்லாம் பக்தியோடு போகிறவர்கள்.இவர் நட்புக்காக போனவர். அங்கு போய் அவர்கள் நடக்கிற வேகத்திற்கு ஈடு கொடுத்து இவரால் நடக்க முடியவில்லை. அவர்களெல்லாம் சுவாமியே அய்யப்போ ! என்று சொல்லி நடக்க நடக்க இவர் தனது பெரிய சரீரத்தை தூக்கிக்கொண்டு ' சுவாமியே பையப்போ !' என்று பதில் கோஷத்தோடு பின்னாலே போவாராம். அந்த அய்யப்போவுக்கு ஈடாக பையப்போ(மெல்ல நட ) என்று ரய்மோடு சொன்னதை சுவையோடு சொல்வார். ஒரு அதிகாலையில் நெஞ்சு வலி வந்து இறந்து விட்டார். அவர் மகள் தற்போது சென்னை எல் ஐ சி யில் பணி புரிகிறார்.

திரு முத்தையா அவர்கள் சைக்கிளில் தினமும் வருவார். அவர் எங்கள் வீட்டு உடைமையாளரிடம் கணக்கு வேலை பார்த்து வந்தவர். அவர் சைக்கிளை நிறுத்தியவுடன் நிற்கிற இடத்திலேயே பெடல் போடுவேன். அவரது குடும்பமே எங்களுக்கு நெருக்கமானது. திரு நடராஜன், ராஜேஸ்வரி, மேடையாண்டி ஆகியோர் பெயர்கள் நினைவில் உள்ளது. அவரின் அம்மா பெரிய பாம்படம் போட்டிருப்பார்கள். இவரின் அசாத்திய பொறுமையும், நிதானமும் என்னை வியக்க வைக்கும்.

திரு கிருஷ்ண சிங் பேருந்து நிலையத்திற்கு அருகில் லாலாக் கடை வைத்திருந்தார். அவர் கடை அல்வாவுக்கு நிறைய மவுசு உண்டு. அவர் வீடு சன்னதித் தெருவின் முதல் வீடு ஆகும். அவர் வீட்டிற்கு அல்வா ரெடி ஆகிற நேரத்திற்கு போனால் சூடாக கை நிறைய அல்வா கிடைக்கும். பால் கோவாவும் டேஸ்டாக இருக்கும். அவரின் மகள் சாந்தி எனது மூத்த சகோதரியின் பள்ளித் தோழி. மகன் மதன் என்னோடு படித்தவன். சுந்தர் சிங், அம்சாஎன்ற மகன், மகளும் நினைவில் இருக்கிறார்கள். இரவு அவரின் கடையில் அப்பாவின் நண்பர்கள் டேரா அடித்துவிட்டு வீடுகளுக்குத் திரும்ப நடுநிசியைத் தாண்டி விடும்.

இந்து நடுநிலைப் பள்ளி, தெற்கு மாடத் தெரு

தெற்கு மாடத் தெருவில் இருந்த இப்பள்ளியின் பிரதானக் கட்டிடம் இந்து உயர்நிலைப் பள்ளி கட்டிடத்திலேயே இருந்தது. ஐந்தாம் வகுப்பு மட்டுமே இங்கு இருந்தது.

எனக்கு திரு எ டி சீனிவாசன் என்ற ஆசிரியர் இருந்தார். அவரின் வீடு கோபுரத்திற்கு எதிரே கந்தாடைத் தெருவில் இருந்தது. அவர் ATS என்று சுருக்கமாகப் போடுகிற கையெழுத்து நினைவில் உள்ளது. (நீராவி ஸ்கூல் ரத்தினம் வாத்தியார் 7 க்கு இறக்கை முளைத்தது போல கையெழுத்துப் போடுவார்) சீனிவாசன் வாத்தியார் கொண்டை போட்டிருப்பார்.

இந்த ஸ்கூல் ஆண்டு விழா உயர்நிலைப் பள்ளியின் விழாவோடு இணைந்து பென்னிங்டன் நூலகத்தில் நடைபெறும். பென்னிங்டன் நூலகத்தை சென்னை கன்னிமாராவுக்கு அடுத்த பெரிய நூலகம் என்பார்கள். இவ்வளவு சின்ன ஊரில் எவ்வளவு பெரிய அறிவுப் பொக்கிஷம் பாருங்கள்! ஐந்தாம் வகுப்பு ஆண்டு விழாவில் ஒரு நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்தேன். மிக மிகச் சுமாராகவே செய்தேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஐந்தாம் வகுப்பின் ஆண்டுத் தேர்வில் இரண்டாம் ரேங்க்கில் வந்ததற்காக அடுத்த ஆண்டு விழாவில் ஒரு திருக்குறள் புத்தகம் பரிசாகப் பெற்றேன்.

மேலமாடத் தெருவைச் சேர்ந்த திரு சம்பத் பின் நாளில் எல் ஐ சி யில் வேலைக்கு வந்தார். அவரோடு மாடத் தெருவின் பழைய நண்பர்கள் பற்றி விசாரித்துக் கொண்டேன்.மேல மாட- தெற்கு மாட வீதி சந்திப்பிலிருந்து மேலரத வீதிக்குப்
போவதற்கு ஒரு சின்ன வீதி உண்டு. அதில் அப்பாவின் நண்பர் திரு. காசி விஸ்வநாதன் குடியிருந்தார். அவர் மடவார்வளாகம் அஞ்சல் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டர் ஆக பணி புரிந்தார்.

இந்தப் பள்ளிக்கூடத்திற்கு போகும் போது தினமும் யானை லாயத்தை பார்க்கலாம். ஆண்டாள் கோயிலின் வெளி மண்டபம் வாயிலாகப் போகவேண்டும். கோயிலுக்குள் நுழையும் இடத்தில் ஒரு பாட்டி ஐந்து பைசாவுக்கு கை நிறைய வறுத்த வேர்க்கடலை தருவார். அவ் வெளி மண்டபத்தில் முதல் கடையில் சின்னச் சின்ன போட்டோக்கள் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அதில் உள்ள எம் ஜி ஆர் படம் ரூ 5 என்பதால் அதை வாங்குகிற நிலைமையில் இல்லை. தினமும் போய் நின்று பார்த்துவிட்டுப் போவேன். ஒரு காதி கடை ஒன்றை புதிதாக திறந்தார்கள். அதில் நாக்கைத் தொங்கவிட்ட போஸில் இருக்கிற நாய் பொம்மை ஒன்றை எல்லோரும் ஆர்வமாக பார்த்தார்கள். ஒரு RMP டாக்டர் , மருந்துக் கடை உண்டு. அவ் வரிசையில் போட்டோ பிரேம் கடை, பாத்திரக்கடை ஆகியனவும் உண்டு. கடைசிக் கடைகளாக இரண்டு பக்கமும் ஆண்டாள் ஸ்நானப் பௌடர் விற்கிற கடைகள் உண்டு. ஒரு தாடிக்காரப் பெரியவர் பெருந்துறவி போல அக்கடையில் அமர்ந்திருப்பார். அவ் வெளி மண்டபம் கோடைக் காலங்களில் கூட குளுமையாக இருக்கும்.வெங்கடேஸ்வரா தியேட்டர்

டிவி என்ன , ரேடியோ கூட வீட்டில் இல்லாத காலத்தில் சினிமா தியேட்டர் மட்டுமே மக்களுக்கு பொழுதுபோக்கு. திருவில்லிபுத்தூரில் முதல் தியேட்டர் கணபதி ஆகும். மதுரை ரோட்டில் இருந்தது அது. எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்தது வெங்கடேஸ்வரா. திருவண்ணாமலை போகிற வழியில் 1970 களுக்கு பிறகு வந்த தியேட்டர் ஜெயகிருஷ்ணா ஆகும்.

புதிய ஜெயகிருஷ்ணா தியேட்டரில் பார்த்த படங்கள் குறைவு. நாளை நமதே என்ற எம் ஜி ஆர் படம் ஒன்று. நான் பார்த்த முதல் ஆங்கிலப் படம் - சில்வர்ஸ்டர் ஸ்டால்லோன் நடித்தது. பெயர் இப்போது நினைவில் இல்லை.

கணபதி தியேட்டரில் கூடுதலாக படம் பார்த்திருந்தாலும் பெயர்கள் நினைவுக்கு வர மறுக்கிறது. ஆனால் எமர்ஜென்சி காலத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி கிடையாதல்லவா! பிந்தைய காலத்தில் அரங்கத்திற்குள் கூட்டங்கள் அனுமதிக்கப்பட்டவுடன் கணபதி தியேட்டரில் அ தி மு க ஒரு கூட்டத்தை நடத்தியது. நான் அக் கூட்டத்திற்கு போயிருந்தேன். எமெர்ஜென்சி அமலாக்கப்பட்டபோது எனக்கு வயது 12 வயதுதான். ஒரு நாள் மாலை ஸ்கூல் கிரௌண்ட் போய் விட்டு வந்தபோது ஜோதி ஸ்டுடியோ அருகில்தான் ஒரு கடையில் தொங்கிய தலைப்பு செய்திகளில் அவசரநிலைப் பிரகடனம்-தலைவர்கள் கைது என்பதைப் பார்த்தேன். தி மு க வைச் சார்ந்த ச. அமுதன் கைது செய்யப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. அன்றைக்கு ஜனதா சாப்பாடு ரூ 1 க்கு ஓட்டல்களில் போட்டதை அரசு ஆதரவாளர்கள் சிலாகித்துப் பேசியது ஞாபகத்திற்கு வருகிறது. பேச்சு சுதந்திரம் பறிக்கப் பட்டதன் சாட்சியமாக கணபதி தியேட்டர் பதிவாகி உள்ளது.

வெங்கடேஸ்வராதான் நிறைய படங்கள் பார்த்த தியேட்டர். தரை டிக்கெட் 25 பைசாவாகவும் பின்னர் 35 பைசாவாகவும் இருந்தது.நான் தனியாக போய் பார்த்த படம் இருளும் ஒளியும். படம் பார்க்க கொடுத்த காசை மூணு சீட்டு விளையாட்டில் கோட்டை விட்டு தியேட்டர் வாசலிலேயே நின்று வசனத்தைக் கேட்டுவிட்டு வந்த படம் குறத்தி மகன். ஸ்கூலில் அழைத்துப் போன படம் மீனாவின் கடிதம். விடுமுறையில் சந்தித்துப் பிரிந்த ஒரு சிறுமி தனது நண்பனுக்கு அனுப்புகிற கடிதம் கங்கை ஆற்றில் மிதந்து போய்ச் சேர்ந்து விடுகிற கதை சுவாரஸ்யமானது. அந்தப் படத்திற்கு போனபோது ட்ரைலராக இதயக் கனி படத்தின் முதல் பாடல் "நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற , நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற" காண்பிக்கப் பட்டது.

உரிமைக் குரல் அங்கேதான் பரபரப்பாக ஓடியது. கலைஞர் ஒரு முறை மேல ரத வீதி - வடக்கு ரத வீதி சந்திப்பில் பேசினார். அவர் வருகிற நாள் எம் ஜி ஆர் படம் ஓடக்கூடாது என்பதற்காக அன்று படம் மாற்றப்பட்டு கலைஞரின் மகன் மு க முத்து நடித்த இங்கேயும் மனிதர்கள் படம் போடப்பட்டது.

தியேட்டர் கியூவில் மூன்று வரிசைகள் இருக்கும். தியேட்டரில் பெல் அடித்தவுடன் வெளிக் கதவை திறப்பார்கள். சுவர் ஏறி குதித்து ஓடுவோம்.
எம் ஜி ஆர் முதலில் வரும்போது வரவேற்பதற்காக நிறைய காகிதச் சுருள்களை பறக்க விடுபவர்களில் நானும் ஒருவன். அப்பாவுடன் போனால் மட்டுமே ரூ 1 டிக்கெட் வாங்கி பால்கனி போகிற வாய்ப்பு கிடைக்கும்.

நீராவி ஸ்கூல்

நான் முதல் வகுப்பிலிருந்து நான்காவது வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடம் இது.
திரு செல்வராஜ் என்பவர் தலைமை ஆசிரியராக இருந்தார். திருமதி முனிநாயகம்
என்பவரே எனது முதல் ஆசிரியர். அய்ந்தாம் வகுப்பு வரையிலேயே இருந்த அப் பள்ளிகூடத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையே ஆள் உயர மரத் தடுப்பே இருக்கும். திரு ரத்தினம் என்ற ஆசிரியர் மூன்றாவது வகுப்பு எடுத்தார். மற்ற ஆசிரியர்கள் பெயர்கள் நினைவில் இல்லை. நம்பி நாயுடு தெருவிலிருந்து ஒரு ஆசிரியை வருவார்.

இப் பள்ளி போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருந்தாலும் எங்கள் வீட்டிற்க்கு நேர் பின்புறம் இருந்தது. காம்பவுண்ட் சுவரில் ஏறிப் பார்த்தால் ஸ்கூல் தெரியும். வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இன்ஸ்பெக்சன் போது பள்ளிக்கூடமே
பர பரத்து போகும். நிறைய சார்ட்டுகள் வகுப்புகளின் மரத்தடுப்புகளில் தொங்கும்.

1971 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின் போது பள்ளி மாணவர் பேரணி நடத்தினார்கள். ஊர் முழுக்கச் சுற்றினோம். " இந்திய நாட்டின் எழில் பாராய்! இமயம் வென்ற கதை கேளாய்! சொந்த நாட்டின் துயர் துடைக்க- சூளுரை ஏற்றாள் நம் அன்னை!" என்ற பாடலை ஒரு பெண்மணி பாட நாங்களெல்லாம் பின் பாட்டு பாடினோம். இப்பாடல் "நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாய்" என்ற புகழ் பெற்ற பாட்டின் மெட்டில் அமைக்கபட்டிருந்தது. இப் பாடலின் அடுத்த பாரா வரிகளும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் இன்று சிலர் குறுகிய அரசியலுக்காக "JINGOISM" ஐ பயன்படுத்துவதால் அவ் வரிகளைத் தவிர்த்திருக்கிறேன். அன்றைக்கு யாஹ்யாஹான் போரில் சரணாகதி என்று அறிவித்தவுடன் எனக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சி. பல ஆண்டுகளுக்கு "இந்திய நாட்டின் எழில் பாராய் " பாட்டு மனதில் நின்று விட்டது.

நீராவி ஸ்கூலின் தாளாளர் வயதானவர். குடையோடு நடந்தே வருவார். ஒரு முறை அவரின் வெள்ளைச் சட்டையில் ஏப்ரல் 1 அன்று பின்னால் போய் மையை அடித்துவிட்டு முன்னால் போய் வணக்கம் சொன்னோம். அவரோ " உங்க அப்பா பேனாவை தொலைத்து விடாதே" என்று சொல்லிவிட்டு நகர்ந்தவுடன் அசடு வழிந்தோம்.

அப்போதெல்லாம் வீடுகளில் மாவுக் குச்சி வாங்கித் தர மாட்டார்கள். வேறு ஒன்றுமில்லை. நாங்கள் மென்று தின்று விடுவோம்.

Wednesday, 3 November 2010

திருப்பாற்கடல்

இப் பெயரைக் கேட்பவர்களின் கற்பனை எவ்வளவு விரியும்
என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அமுதம் எத்தனை
லிட்டர் தினமும் கிடைக்கும் என்ற கணக்கு கூட மனதிற்குள்
வந்து போகும். திருவில்லிப்புத்தூரில் இருந்து ராஜபாளையம்
செல்லும் வழியில் தேரடி-சிவகிரி அரண்மனை-கூட்டுறவு
வங்கி கட்டிடம் என இடது பக்க காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக
கடந்து போகும் போது கண்களைத் திருப்பாமல் இருந்தால்
திருப்பாற்கடல் தரிசனம் கிடைக்கும்.

சின்னககுளம்தான்.கரையில் பிள்ளையார் கோயில்.அக்கரையின்
ஆரம்பத்தில் புதிய முனிசிபல் கட்டிடம் இருக்கும்.அக்கரை
வழியாக நடந்து போனால் கிருஷ்ணன் கோயில் வரும்.
ரயில்வே ஸ்டேஷன் செல்கிற வழியும் அதுதான்.
1970 களில் அநேகமாக வீடுகள் ஏதும் இருக்காது.

திருப்பாற்க்கடலின் மிகப்பெரிய பயன் என்ன தெரியுமா? ஆத்திகர்களின்
மனது புண்படக் கூடாது என்ற கவனத்தோடு சொல்கிறேன். நூற்றுக்
கணக்கான சாமானிய மனிதர்களின் காலைக் கடன்கள் ஈடேறுகிற
இடமாக அது இருந்தது. தீபாவளியின் போது நெருக்கமான குடியிருப்புகளில்
ராக்கெட் விட முடியாதவர்கள் இங்கே வந்து விடுவார்கள். ஆண்டாள் கோயில்
யானையை குளிப்பாட்டுகிற காட்சியையும் பார்த்திருக்கிறேன். சப்பாத்திக்கள்ளி
செடிகளும்,ஊமத்த செடிகளும் நிறைய இருக்கும். மடவார் வளாகம் கோவிலுக்குச் செல்பவர்கள் இக் குளக்கரை பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு செல்வார்கள்.

பெயருக்கு சற்றும் பொருத்தமில்லாததாக இருந்த பாற்கடல் அது. நான் வங்காள விரிகுடாக் கடலை சென்னையில் இருபது வயதில் பார்த்தபோது அதன் பிரமாண்டம் என்னை வியக்க வைத்தது. என் நினைவுக்கு பதின் மூன்று வயது வரை பார்த்திருந்த திருப்பாற்கடல் வந்தது. சிரிப்பும் வந்தது

Tuesday, 2 November 2010

சக்கரக் குளம்

நான்கு பக்கமும் படித்துறையுடன் அழகாக இருந்த குளம். தண்ணீர் நிரம்பிப்
பார்த்த சந்தர்ப்பங்கள் மிக மிக அரிது. ஒரு பக்க படித்துறை பழைய முனிசிபல்
அலுவலகக் கட்டிடத்தை ஒட்டி இருந்ததால் அதை யாரும் பயன்படுத்த
மாட்டார்கள். மேற்குப் பக்கப் படித்துறையும் மண் மேவி மூடப்பட்டுவிட்டது.

திருவில்லிப்புத்தூருக்குள் பெரிய விளையாட்டு மைதானங்கள் கிடையாது.
நகரின் மையத்திலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம்
கூட ஊருக்கு வெளியே சி எம் எஸ் பள்ளிக்கூடத்தின் அருகே இருந்தது.(இப்பவும்
அங்கேதானா?) எனவே தண்ணியில்லா சக்கரக்குளம் கிரிக்கெட், ஹாக்கி விளையாடுகிறமைதானமாக மாறிவிட்டது. ஹாக்கி ஸ்டிக் வாங்க வசதி இல்லாததால் அதைப் போல வளைந்த விறகுக் கட்டைகளை வைத்து விளையாடுவார்கள். கிரிக்கெட்டுக்கும் ஸ்டம்ப்ஸ்க்கு ஒல்லியான விறகுக் கட்டைகளைத்தான் நட்டு வைப்பார்கள். சக்கரக் குளத்திற்கு கிழக்குப் பக்கம் முக்கு வீட்டு ரகு என்பவர் நலல கிரிக்கெட் பிளேயர். என்னுடைய அண்ணன் நலல ஹாக்கி பிளேயர். அவர் சி எம் எஸ் ஸ்கூலில்
அந்த ஸ்கூல் டீமில் இருந்தவர். நானும் ஓரளவு கிரிக்கெட்
விளையாடுவேன். சக்கரக் குளத்தின் நடுவில் பெரிய சதுரமான மேடு ஒன்று
இருக்கும். அதற்கு மேலே உட்கார்ந்து விளையாட்டை வேடிக்கை பார்ப்போம்.

பிறகு இரண்டு ஆண்டுகள் அது பால் பாட்மிட்டன் மைதானமாக மாறியது.
மின்சார வாரியத்தில் பணி புரிந்த திரு லெட்சுமணன் அருமையாக விளையாடுவார்.அவர் அடர்த்தியான மீசை வைத்திருப்பார். ஆண்டாள் கோவிலுக்குள் ஸ்வீட் ஸ்டால் வைத்திருந்த லாலாவும் நல்லா விளையாடுபவர். ராஜா ராம் என்ற ப்ளேயரும் நினைவில் நிற்பவர். அங்கு ஒரு மாநில அளவிலான போட்டி நடைபெற்றது.இறுதிப் போட்டியில் கடைசி பாலில் ராஜாராம் ஜோடியின் தலைவிதியே மாறி தோற்று விட்டார்கள். டபுள்ஸ் மட்டுமின்றி பைவ்ஸ் விளையாடுவதையும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்திருக்கிறேன்.
சக்கரக்குளத்திற்கு வடக்குப் பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் மதுரை அழகர் நகரில் பின்னர் குடியிருந்தார். சினிமா விட்டால் வெங்கடேஸ்வரா தியேட்டரில் இருந்து மக்கள் இந்த வழியாகத்தான் அதிகமாக வருவார்கள்.

சக்கரக் குளத்தின் மேற்கு-வடக்கு முனையில்தான் போஸ்ட் ஆபீஸ் இருக்கும்.
வடக்கு படித்துறை எதிர் வீட்டில் ரெங்கசாமி என்பவர் வீடு இருந்த ஞாபகம் உள்ளது.வடக்குப் பக்கத் தெரு வழியாக நேரே சென்றால் வருகிற தெரு நம்பி நாயுடு தெரு ஆகும். அத்தெருவின் முனையில் உள்ள கடைக்கு சென்றுதான் காலையில் சட்டினிக்கு தேங்காய்ச் சில்லு வாங்குவேன். ஐந்து பைசாவுக்கு சின்ன சின்னதாய் ஐந்து சில்லு கிடைக்கும்.

சிவகிரி அரண்மனைக்கு பக்கத்தில் இந்தக் குளம் இருப்பதால் அந்தக் காலத்தில்
படை வீரர்கள் இங்கேதான் குளித்திருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

Monday, 1 November 2010

தேரடித் திடல்


திருவில்லிபுத்தூரின் அரசியல் பள்ளிக்கூடம் என்று
தேரடித் திடலைச் சொல்லலாம்.எத்தனையோ பொதுக்
கூட்டங்கள் இங்கு நடைபெற்றன.அப்போதெல்லாம் இப்போதைய
பெற்றோர் போல படி..படி.. என்று பிள்ளைகளை உயிரை
வாங்குகிற டார்ச்சர் எனக்குஇருந்ததில்லை.மாணவப் பருவத்தை
நன்றாக ரசித்தேன் எனலாம்.இரவுப் பொதுக்கூட்டம்
என்றால் மாலை 6 மணிக்கெல்லாம் மைக் செட்டுக்காரர்
பாட்டைப் போட்டு அமர்க்களப்படுத்தஆரம்பித்து விடுவார்.
வாண்டுகளெல்லாம் கூட்டம் ஆரம்பிக்கும்வரை போடுகிற
கும்மாளத்திற்கு குறைவு இருக்காது.தேரடிக்கு எதிரே
ஒரு விறகுக் கடை உண்டு. பக்கத்தில் ஒரு டீக் கடை உண்டு.
அப்போதெல்லாம் கருப்பட்டி காபி கிடைக்கும். தேருக்கு
வலது பக்கம் இருந்த பெரிய காலி இடத்தில் சர்க்கஸ்,
மிருகக் காட்சி ஆகியன ஏற்பாடு ஆவதுண்டு.

தந்தை பெரியார் பேசுவதை இரண்டு தடவை கேட்டிருக்கிறேன்.
கோடையில் ஆண்டாள் நீராவிப்பள்ளியில் உள்ள வசந்த
மண்டபத்திற்கு வந்து 10 நாள் தங்குகிற வைபவம் உண்டு.
அந்த காலம் பார்த்தே திராவிடர் கழகம் இக் கூட்டத்தை
ஏற்பாடு செய்வது வழக்கம். தேரில் இருந்து மின் வாரிய
அலுவலகம் வரை கூட்டம் நிரம்பி வழியும். சன்னதி தெரு
பட்டர்கள் ரொம்ப தீட்டு பார்ப்பார்கள்.சாமி எங்கள் தெரு
வழியாக செல்லும் போது தீர்த்தம் வாங்கச் சென்றால் மேலே
கை பட்டுவிடக்கூடாது என்று பட்டர்கள் சீறி விழுவார்கள்.
சேட்டைக்கார பையன்கள் வேண்டுமென்றே இடித்து
விட்டு ஓடி வந்துவிடுவார்கள். சன்னதி தெருவில்
தப்பித் தவறி வசித்த ஒரு சில BC களுக்கு
தீண்டாமை அனுபவம் 1970 களில் ஆழமான காயங்களாக
இருந்தன. பெரியாரின் பேச்சுக்கள் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தின.

ராஜாஜி பேசியும் கேட்டிருக்கிறேன். அவருக்கு கூட்டம்
அதிகம் இருக்கவில்லை. சுதந்திராக் கட்சி அப்போது சிவகாசி
நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி போடுகிற அளவிற்கு
வளர்ச்சியோடு இருந்தது.

அ.தி.மு.க பிறந்த பிறகுதான் மேடைப் பேச்சுக்களில்
அனல்பறக்க ஆரம்பித்தது. 1971 தேர்தலில்
எம் ஜி ஆர், தி மு க வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போது
இரவு 10 மணிக்கு வருவார் என்றுதேரடித் திடல் அருகே
காத்திருந்தது நினைவில் உள்ளது. கீழ ரத வீதி முழுவதும் கூட்டம் அலை
மோதியது, 10 மணி..11 .. !2 .. என்று நேரம் ஓடியது, எம் ஜி ஆர்
வருகை தாமதம் ஆகிக் கொண்டே போனது. ஆனால் கூட்டம்
கலையவே இல்லை. எங்கள் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து இருந்தோம்.
அதிகாலை 4 மணிக்கு எம் ஜி ஆர் வந்தார், அவரின் வேனில்
பெட்ரோமேக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் முதல் முதலாக அவரைப்
பார்த்தேன்.அதில் இருந்து 10 ஆண்டுகள் அவரின் தீவிர ரசிகனாக இருந்தேன்.
எம் ஜி ஆர் முதல்வர் ஆன பிறகு அவர் அரசு மீது நம்பிக்கை இல்லாத்
தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது CPM தோழர் ஆர் உமாநாத் ஆற்றிய
உரை சிறு பிரசுரமாக வெளியிடப்பட்டது. அந்த உரையை படித்த போதுதான்
எம் ஜி ஆர் மீதான தனி நபர் வழிபாட்டில் முதல் கீறல் என் மனக்
கண்ணாடியில் விழுந்தது.மீண்டும் தேரடித்திடலுககே வருகிறேன்.

எம் ஜி ஆரின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி ஒரு முறை தேரடித் திடலில்
பேசினார். எனக்கு ஒரு கேள்வி அன்றிலிருந்து இன்று வரை மனதில்
உள்ளது. திருவில்லிபுத்தூர் எம் ஜி ஆரின் கோட்டை.
ஆனால் தனிக் கட்சி ஆரம்பித்து 4 ஆண்டுகள்
ஆன பின்னரும் அந்த ஊருக்கு அவர் வருகை தரவில்லை. ஏன்?
இந்த நேரத்தில்தான் சக்ரபாணியின் வருகைநிகழ்ந்தது.எனவே
எம் ஜி ஆரை பார்க்க வேண்டுமென்ற ஏக்கத்திற்கு வடிகால் போல
எக்கச்சக்கமான கூட்டம். நான் அக்கூட்டத்தில் முன் வரிசையில்
தரையில் அமர்ந்திருந்தேன்.

சைதை தமிழ்ச்செல்வன் என்பவரின் பலகுரல் பேச்சு சிறப்பாக
இருக்கும். தி மு க வின் மணி-சாமி குழுவினரின் கலை
நிகழ்ச்சி மக்களை ஈர்க்கும். போலீஸ் கண்ணன், மாடி லட்சுமி
போன்றோரின் கூட்டங்களுக்கு மக்கள் அதிகமாக வருவார்கள்.
அந்த ஊரில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சிதான் அப்போது பலமாக இருந்தது.
க.சுப்பு , சக்தி கோதண்டம்போன்றவர்கள் பிரபலமான
தலைவர்களாக இருந்தனர். விலைவாசி, தொழிலாளி என்று
அவர்கள் பேசுவார்கள்.சுரத்தே இல்லாமல் கேட்டிருக்கிறேன்.

தேரடித் திடலில் பெரிய தேரின் வடம் சுருட்டி சுருட்டிப்
போடப்பட்டிருக்கும். அதற்குள் உள்ள வட்டத்திற்குள் படுத்துக்
கொள்வது சுகமாக இருக்கும். பொதுக் கூட்டம் முடிந்து நான்
வீட்டுக்கு வராததால் அம்மா தேடி வந்து மைக் செட்டுக்
காரரிடம் விசாரித்து பின்னர் வடத்தின் வட்டத்திற்குள்
இருந்து எழுப்பி அழைத்துப் போன நிகழ்ச்சியும் உண்டு.

Saturday, 30 October 2010

ராவன்னா கீனா அவர்கள்


இராகிருஷ்ணசாமி அவர்கள் ,
முன்னாள் தலைவர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

அரங்கநாதர் சன்னதி தெரு , ஸ்ரீவில்லிபுத்தூர்


தெருவின் நடுவில் நின்று மேற்கே திரும்பிப் பார்த்தால் ஆண்டாள் கோயில் தெரியும்.சின்ன வீதிதான்.ஆண்டாள் கோயிலுக்கு எதிரே உள்ள சன்னதித் தெருவின் நீட்சிதான் இந்தத் தெரு. குறுக்கே கீழ ரத வீதி இருக்கும்.
எங்கள் வீட்டின் இலக்கம் 3 ஆகும். மொத்தமே 10 வீடுகள்தான்.

ஒன்னாம் நம்பர் வீடுதான் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த திரு ரா கிருஷ்ணசாமி அவர்களின்வீடு. இவர் சாத்தூரின் எம் எல் ஏ ஆகவும் இருந்திருக்கிறார். அவர் வீட்டிலும், எதிரே இருந்த அவரது உறவினர் திரு நா.கி வீட்டிலும் மட்டுமே டெலிபோன் உண்டு. பெரிய கறுப்புக் கலர் கருவியில் லோக்கல் கால் பேசுவதற்கே எக்ஸ்சேஞ்ச்மூலமே லிங்க் கிடைக்கிற காலம. அவசரத்திற்கு இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.அந்த ஊரில்
கூட்டத்திற்கு பேச வருகிற காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் அவர் வீட்டுக்கு மரியாதைக்காகவும்,இரவு உணவிற்காகவும் வருவார்கள். ஒருமுறை நடிகர் பிரேம் ஆனந்த் (சிவாஜி படங்களில் 70 களில் நடித்தவர்) வந்தபோது தெருவே போய் வேடிக்கை பார்த்தது. விவசாயிகள் போராட்டத்தின் போது
அவரது வீடு தி மு க வினரால் கல்லெறிக்குள்ளானது. அவரது வீட்டில் இருந்த திரு மூக்கய்யா என்ற பணியாளரை எங்கள் வீட்டில் வைத்துதான் எங்கள் அப்பா பாதுகாத்தார். எங்கள் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த
வேனற்பந்தலை அக்கும்பல் எட்டி உதைத்து உலுக்கியது எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது திருவில்லிபுத்தூரில் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த திரு ராமசந்திரன் நடுநிலையாக இருந்து அப்பிரச்சினையை
சமாளித்ததாக பரவலான பாராட்டு இருந்தது. திரு ரா.கி அவர்கள் அப்போது தனியாக வீடு பார்த்துக் குடி போயிருந்தார். அந்த வீட்டிற்கு கலவரக் கும்பல் போன போது அவர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பினார் என்று மறுநாள் பரபரப்பான பேச்சு ஊருக்குள் இருந்தது. இந்தப் பெரியவர் ராவன்னா கீனாவின் பெயர் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தின் டிரஸ்ட்டிகளின் பட்டியலில் இருந்ததை நான் 2001 ல் அங்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டிற்கு சென்ற போது பார்த்தேன். இவரது பேத்தி பிரேமா அவர்களின் கணவர் திரு வரதராஜுலு பிந்தைய காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தார். நான் பக்கத்தில் இருந்து பார்த்த முதல் அரசியல்வாதி ரா கி தான். எளிமையானவர். யாரும் எப்போதும் சந்திக்க முடியும்.

இரண்டாம் நம்பர் வீட்டு பெரியவர்களை நாங்கள் பெரியப்பா, பெரியம்மா என்றுதான் அழைப்போம்.ஆனால் உறவினர்கள் அலல. அவர்கள் வீட்டில் சண்முகம்,.லட்சுமி,கோமதி என்ற சகோதரிகளும், துரை, சந்திரன், மாரியப்பன் ஆகியோரும் உண்டு. திரு சந்திரன் அவர்களை மட்டும் 30 வருடம் கழித்து 2006 ல் மதுரையில் சந்தித்தேன். அப்போதெல்லாம் திருவில்லிபுத்தூரில் கல்லூரிகள் கிடையாது. சிவகாசிக்கு போகவேண்டும். பாலிடெக்னிக் என்றால் ராஜபாளையம் போக வேண்டும். சந்திரன் சைக்கிளில் தினமும் 10 கி மீ சென்று பாலிடெக்னிக்கில் படித்தார்.அந்தப் பெரியப்பாவின் பேரன்தான் பின்னர் சாத்தூரில் எல் ஐ சி பணிக்கு வந்த திரு நமசிவாயம். காலச் சக்கரத்தின் சுழற்சியில் இப்படிச் சில சந்திப்புகளும் அரிதாக நிகழ்கின்றன.

மூன்றாம் நம்பர் வீடுதான் எங்கள் வீடு. அந்த தெருவில் இருந்த ஒரே ஓட்டு வீடு அதுதான். மின் விசிறி கிடையாது.வெயில் காலத்தில் நீர்க் கடுப்பால் பல நாள் இரவு தவித்திருக்கிறேன்.எடுப்புக் கக்கூசுதான். ( அன்றைக்கு எங்களது கஷ்டம் மட்டும்தான் புரிந்திருந்தது. அருந்ததியனின் வலி தெரியாத அடி முட்டாள்த் தனத்திற்காக இன்றைக்கு வருந்துகிறேன் ). எதிரே மின் விளக்கு வராத வரை எங்கள் வீட்டிற்க்கு எதிர்ப் பகுதியே பொதுக் கழிப்பறையாக பயன்பட்டது. அப்போது தண்ணீர்க் கஷ்டம் ரொம்ப இருந்ததால் வீட்டிற்குள் முனிசிபல் தண்ணீர்க் குழாய்க்க்கான தொட்டி கிணறு மாதிரி ஆழமாக இருக்கும். கீழே இருந்து தண்ணீரைப் பிடித்து யாராவது கொடுத்தால் மேலே யாராவது நின்று வாங்க வேண்டும்,

நான்காவது வீடு ஒரு உதவி வணிக வரி அதிகாரியின் வீடு. அவர் வீட்டிற்க்கு போய்தான் ஆல் இந்திய ரேடியோ நியூஸ் கேட்போம்.
கர கர வென்று கேட்டாலும் சரோஜ் நாராயண சாமியின் குரல் இப்போதும் காதிலேயே ஒலிக்கிறது. அந்த அதிகாரியின் பெயர் நடேசன் என நினைக்கிறேன். அவரது மகன் முருகேசன் மதுரையில் படித்தார். தீபாவளிக்கு நிறைய வெடிகளைப் போடுவதை ஆதங்கத்தோடு வேடிக்கை பார்ப்போம்.

ஐந்தாவது இடம் கோகுலம் என்று போடப்பட்டிருக்கும். காலி இடம். முட்புதர் மண்டியிருக்கும். ஒரு தடவை பெரிய மண்ணுளிப்
பாம்பை பிடித்து எரித்தது நினைவில் இருக்கிறது.

எதிர்ப்பக்கத்தில் ஆதி ரங்கநாதர் கோயில் சின்னதாக இருக்கும். அதற்குப் பக்கத்தில் உள்ள பெரிய காலி இடத்தில் பெரிய விழா நடத்தி கவர்னர் கே கே ஷா ( கலைஞர் அரசை 1976 ல் டிஸ்மிஸ் செய்யப் பரிந்துரைத்தவர் ) அடிக்கல் நாட்டிய கட்டிடம் பின்னர் எழும்பவே இல்லை. அக் காலி இடம் வாயிலாகவே எனது நண்பன் வீட்டிற்க்கு குறுக்கு வழியில் ஓடிப் போவேன்.எனவே அக் கட்டிடம் வராததில் மகிழ்ச்சியே எனக்குள் இருந்தது.

எதிரே பால் பண்ணை. எனவே தண்ணீர் இல்லாத பால் கிடைக்கும். பின்னர் அரசியலில் பிரபலமான திரு தாமரைக்கனி அவர்களின் அம்மா அங்குதான் தனது மாட்டை பால் கறக்க கொண்டு வருவார். தாமரைக்கனி மிக மிக ஒல்லியாக அந்தத் தெருவில் அடிக்கடி நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்.இவ்வளவு பக்கத்தில் இருந்த பால் பண்ணையில் பால் வாங்குவதற்கான கூப்பன் வாங்குவதற்கு 1 கி மீ க்கும் அதிகமாக நடந்து பஸ் ஸ்டாண்ட் தாண்டிச் செல்ல வேண்டும்.

பத்தாம் நம்பர் வீடு எனது நண்பன் சீனிவாசன் வீடு. அவனது அப்பா திரு கோபால்சாமி ( வக்கீல்) ஆவார். எங்கள் தெருவில் அவர் மட்டுமே ஸ்கூட்டர் வைத்திருந்தார்.அவர்கள் வீட்டில் பெரிய தோட்டம் உண்டு. இரண்டு பெரிய அசோகா மரங்கள், துளசி மாடம், தென்னை மரங்கள் எல்லாம் இருந்தது நினைவுக்கு வருகிறது. நாங்கள் அவர்கள் வீட்டில்தான் தண்ணீர் இறைத்துக் கொள்வோம்.இராட்டினத்தில் தண்ணீர் இறைத்து முடிவதற்குள் கைகளில் தோல் உரிந்துவிடும். 31 குடங்கள் எடுத்தால்தான் எங்கள் வீட்டு டிரம், சிமின்ட் தொட்டி உட்பட பாத்திரங்கள் நிரம்பும். பெடல் போடுகிற பேபி கார் ஒன்று அவர்கள் வீட்டில் உண்டு. ஒன்னாவது வகுப்பு மட்டும் என்னோடு படித்த சீனிவாசன் பிறகு ஸ்கூல் மாறி கான்வென்ட் போன போது எனக்கு வருத்தமாக இருந்தது.புது பாசன் சட்டைகளை அவன் போடுவான். நியூஸ் பேப்பர் மாதிரி கொல்லாஜ் செய்த டிசைன் சட்டையை அவன் போட்டபோது அது மாதிரி வேண்டும் என்று அப்பாவிடம் அழுது இருக்கிறேன். ஆனால் கிடைக்கவில்லை. திரு சீனிவாசன் விவசாயக் கல்லூரியில் படித்து தற்போது விவசாய அதிகாரியாக இருக்கிறான். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒருவர்க்கு உதவி கோரி ஒரு கடிதம் எழுதியிருந்தான். நல்ல ஆங்கிலத்தில் இருந்தது அக் கடிதம். இவனது கொள்ளுத் தாத்தாதான் ராவன்னா கீனா அவர்கள்.
எங்கள் தெருவிலேயே சிவகிரி அரண்மனையின் ஒரு பக்கம் அமைந்திருக்கும்.எங்கள் அப்பா அதில்தான் வேலை பார்த்தார்.
அதில் மின்சார வாரிய ஆபீஸ் இருந்தது. மின் கட்டணம் காட்டுகிற பிரிவு எங்கள் தெருவில்தான் இருந்தது.

எங்கள் தெரு முக்கில் ஒரு திறந்த மண்டபம் ஒன்று இருந்தது. ஆனால் அது சிதிலமடைந்ததால் அகற்றப்பட்டது. சொக்கப் பனை எங்கள் தெருவிலேயே நடைபெறும். ஓங்கி உயர்ந்து எரிகிற தீயை இப்போது நினைத்தாலும் அதன் கதகதப்பை உணர முடிகிறது.வழுக்கு மரம், உறியடி எல்லாம் எங்கள் தெருவில்தான் நடைபெறும்.

விவரம் அறிந்த பின்னர் ஐந்தாறு ஆண்டுகளே அத்தெருவில் இருந்தாலும் ஏதோ நீண்ட காலம் இருந்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.Friday, 29 October 2010

வழியனுப்பிய கோபுரம்எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எனினும் திருவில்லிபுத்தூரின் கம்பீரமான கோபுரம் மனதிற்கு இன்றைக்கும் நெருக்கமானதாகவே உள்ளது. காரணம் 1976 வரை வாழ்ந்த ஊர் அது.

நான்காவது வரை படித்த நீராவி ஸ்கூல், தண்ணி இல்லாமல் பேட்மிண்டன் மைதானமாக மாறிப்போன சக்கரக் குளம், ஆண்டாள் கோவில் லாலா கடை. திருப்பாற்கடல் பிள்ளையார் கோயில், மடவார்வளாகம் சிவன் கோயில் குளம். சிவகிரி அரண்மனை, ஆண்டாளை பெரியாழ்வார் கண்டெடுத்த துளசி மாடம், ஒன்றரை மணி நேரத்தில் ரதவீதியை சுற்றி வந்துவிடும் செப்புத் தேர், 17 வருசமா ஓடாம இருந்த பெரிய தேர், பென்னிங்க்டன் நூலகம். மாடத் தெரு இந்து நடுநிலைப் பள்ளி, அபி மன்னன் பாத்திரக்கடை, நண்பனின் ஜோதி ஸ்டுடியோ, திருமுக்குளம், சி எம் எஸ் விளையாட்டு மைதானம். சின்ன அண்ணா மா. குருசாமி கல்லறை, சிவகாசி பஸ் நிற்கிற மாதா கோயில், வெங்கடேஸ்வரா தியேட்டர், பெரிய கண்மாய், மேலரத வீதியில் காமராஜர் திறந்து வைத்த ராவன்னா கீனா சிலை, உமையாள் விலாஸ் ஓட்டல், அப்போது ஊருக்கு வெளியே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஜெய கிருஷ்ணா தியேட்டர், ஜெயராம் ட்ரான்ஸ்போர்ட், சிவப்புக் கலரில் ஓடிய
ஸ்டேட் ட்ரான்ஸ்போர்ட் பஸ், வீட்டுக்கு எதிரே இருந்த பால் பண்ணை, பஸ் ஸ்டாண்ட் முக்கில் இருக்கிற பாலசுப்ரமணியவிலாஸ், கோவிந்தம் பிள்ளை கடை, கீழரத வீதியில் அண்ணா படங்களோடு இருந்த சலூன், காய்ச்சலுக்கு மிக்சர் கொடுத்த கம்பௌண்டர் ஆதி, இந்து ஐ ஸ்கூல் முன்பு கீறி கீறிக் கிடைக்கிற கருப்பட்டி அச்சு மிட்டாய், பெரியார்- ராஜாஜி-எம் ஜி சக்ரபாணி- மதியழகன் பேசிய தேரடித் திடல், சுருண்டு சுருண்டு பிரம்மாண்டமாய் கீழரத வீதியில் கிடந்த கைக்குள் அடங்காத பெரிய தேர் வடம், நண்பர்கள் ரமேஷ் பாபு, சீனிவாசன், ராதா சங்கர், சங்கர், மகேஸ்வரன் ....இப்படி நினைவலைகள் அலை மோதுகின்றன.

அந்த ஊரை விட்டு 1976 ஜூன் மாதம் வெளியேறியபோது பஸ் எல்லையைத் தாண்டிய பிறகும் திரும்பிப் பார்த்தபோது தெரிந்தது இந்த கோபுரம்தான்.