Friday, 12 November 2010

இந்து உயர்நிலைப் பள்ளி மைதானம்

பள்ளிக்கூடம் ஆண்டாள் கோவில் பக்கத்தில் இருந்தாலும் விளையாட்டு மைதானம் 3 கி மீ தூரத்தில் சி எம் எஸ் பள்ளிக்கு அருகில் இருந்தது. சி எம் எஸ் மைதானமும், இதுவும் ஒரு கம்பி வேலியால் பிரிக்கப்பட்டு இருக்கும். வாரம் ஒரு நாள் மைதானத்திற்கு செல்லவேண்டும்.

மேலரத வீதி, நாடகசாலைத் தெரு, திருமுக்குளம் வழியாக செல்லவேண்டும். நாடக சாலைத் தெரு பார்க்க அழகாக இருக்கும். முதல் முதலில் கனரா வங்கி கிளை இத்தெருவில் வந்த நினைவு உள்ளது. வடக்கு மாட வீதியில் ஸ்டேட் வங்கி இருந்தது. திருமுக்குளத்திற்கு சேருகிற இடத்தில் மலைச் சாலை போல செங்குத்தாக இருக்கும். திருமுக்குளமும் எழில் மிக்கது. அக்குளத்திற்குள் சிறிய சதுரமாக ஒரு குளம் இருக்கும். அதற்குள் சுழல் இருக்கும் என்பதால் அதில் இறங்க எவரும் யோசிப்பார்கள். கொஞ்சம் தாண்டினால் சி எம் எஸ் இணைப்புக் கட்டிடம் ஒன்று. கூடை பந்து மைதானம் உண்டு. இன்னும் கடந்தால் இடது பக்கம் ஒரு கிறித்தவ மிசனரி கட்டிடத்தின் நீண்ட காம்பவுண்டு இருக்கும்.

அந்த ஊரில் ஹாக்கி பலரும் விரும்புகிற விளையாட்டு. கபடி உண்டு. கிரிக்கெட் உண்டென்றாலும் இன்று இருக்கிற அளவுக்கு அதன் ஆதிக்கம் அப்போது கிடையாது. இரண்டு பள்ளிகளின் நூற்றுக் கணக்கான மாணவர்கள் விளையாடுகிற காட்சிகள் கண் கொள்ளதவைதான். காக்கி-வெள்ளையில் இந்து பள்ளி மாணவர்களும், ஊதா-வெள்ளையில் சி எம் எஸ் மாணவர்களும் மைதானத்தை கலக்குவார்கள்.

1 comment:

  1. அந்த நாள் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன.
    கனரா வங்கி சர்ச்சுக்கு அருகில் சாத்தூர் ரோட்டிற்கு சென்று விட்டது. பாரத ஸ்டேட் வங்கி தெற்கு ரத வீதிக்கு போய்விட்டது. சி.எம்.எஸ்.பள்ளி, இந்து உயர்நிலைப்பள்ளி மைதானங்கள் சுவர்கள் கட்டப்பட்டு விட்டன. பக்கத்தில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் 'கோட்டைக்காளி அம்மன் கோவில்' முடிய கட்டிடங்களாக மாறி விட்டன. நமது ஊரின் பசுமை போய்விட்டன. சி.எம்.எஸ். பள்ளியின் பழைய களை (charm) போய்விட்டது.
    நன்றி.

    ReplyDelete