நான் முதல் வகுப்பிலிருந்து நான்காவது வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடம் இது.
திரு செல்வராஜ் என்பவர் தலைமை ஆசிரியராக இருந்தார். திருமதி முனிநாயகம்
என்பவரே எனது முதல் ஆசிரியர். அய்ந்தாம் வகுப்பு வரையிலேயே இருந்த அப் பள்ளிகூடத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையே ஆள் உயர மரத் தடுப்பே இருக்கும். திரு ரத்தினம் என்ற ஆசிரியர் மூன்றாவது வகுப்பு எடுத்தார். மற்ற ஆசிரியர்கள் பெயர்கள் நினைவில் இல்லை. நம்பி நாயுடு தெருவிலிருந்து ஒரு ஆசிரியை வருவார்.
இப் பள்ளி போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருந்தாலும் எங்கள் வீட்டிற்க்கு நேர் பின்புறம் இருந்தது. காம்பவுண்ட் சுவரில் ஏறிப் பார்த்தால் ஸ்கூல் தெரியும். வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இன்ஸ்பெக்சன் போது பள்ளிக்கூடமே
பர பரத்து போகும். நிறைய சார்ட்டுகள் வகுப்புகளின் மரத்தடுப்புகளில் தொங்கும்.
1971 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின் போது பள்ளி மாணவர் பேரணி நடத்தினார்கள். ஊர் முழுக்கச் சுற்றினோம். " இந்திய நாட்டின் எழில் பாராய்! இமயம் வென்ற கதை கேளாய்! சொந்த நாட்டின் துயர் துடைக்க- சூளுரை ஏற்றாள் நம் அன்னை!" என்ற பாடலை ஒரு பெண்மணி பாட நாங்களெல்லாம் பின் பாட்டு பாடினோம். இப்பாடல் "நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாய்" என்ற புகழ் பெற்ற பாட்டின் மெட்டில் அமைக்கபட்டிருந்தது. இப் பாடலின் அடுத்த பாரா வரிகளும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் இன்று சிலர் குறுகிய அரசியலுக்காக "JINGOISM" ஐ பயன்படுத்துவதால் அவ் வரிகளைத் தவிர்த்திருக்கிறேன். அன்றைக்கு யாஹ்யாஹான் போரில் சரணாகதி என்று அறிவித்தவுடன் எனக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சி. பல ஆண்டுகளுக்கு "இந்திய நாட்டின் எழில் பாராய் " பாட்டு மனதில் நின்று விட்டது.
நீராவி ஸ்கூலின் தாளாளர் வயதானவர். குடையோடு நடந்தே வருவார். ஒரு முறை அவரின் வெள்ளைச் சட்டையில் ஏப்ரல் 1 அன்று பின்னால் போய் மையை அடித்துவிட்டு முன்னால் போய் வணக்கம் சொன்னோம். அவரோ " உங்க அப்பா பேனாவை தொலைத்து விடாதே" என்று சொல்லிவிட்டு நகர்ந்தவுடன் அசடு வழிந்தோம்.
அப்போதெல்லாம் வீடுகளில் மாவுக் குச்சி வாங்கித் தர மாட்டார்கள். வேறு ஒன்றுமில்லை. நாங்கள் மென்று தின்று விடுவோம்.
நானும் அந்தப் பள்ளி மாணவன் தான். 1955-1960 அங்கு படித்தேன். நாங்கள் வடக்கு ரத வீதி முக்கு வீட்டில் குடியிருந்தோம். அப்போது பைபாஸ் ரோடு கிடையாது. அங்கு வான்கோழி, கோழி வளர்த்து வந்தோம். உங்களுக்கு தெரியுமா என தெரியவில்லை. தற்போது சின்னக்கடை வீதி பக்கம் வந்து விட்டோம்.
ReplyDeleteநன்றி.