courtesy: kisanbachao.blogspot.com
கோமல் சுவாமிநாதனின் அத்திப் பட்டியை திரையில் பார்த்த போது எனக்கு அது ஒன்றும் வியப்பாக இல்லை. ஏனெனில் திருவில்லிபுதூரின் தண்ணீர் பற்றாக்குறை பல்லாண்டுப் பிரச்சினையாக இருந்தது.
கிட்டத்தட்ட
17 ஆண்டுகளாக மழையே இல்லை என்று எனக்கு நினைவில் இருக்கிற காலம் தொட்டுப் பேசிக் கேட்டிருக்கிறேன். திருவில்லிபுதூரின் பெரிய தேர் 1956 லிருந்து ஓடாமல் இருந்ததுதான் காரணம் என்று பரவலான நம்பிக்கை உருவாக்கப்பட்டது. ஒரு பட்டரின் கனவில் ரங்க மன்னார் வந்து சொன்னதாக ஒரு செய்தியும் உலா வந்தது. இப் பின்புலத்தில்தான் பெரிய தேர் உலா மீண்டும் துவங்கியது.
இதே காலத்தில் தமிழகம் முழுக்க மழை பெய்யாமல் கிருபானந்த வாரியார், குன்னக்குடி வைத்யநாதன் போன்றோர் சென்னை கடற்க் கரையில் பிரார்த்தனை, இசை ஆகியவற்றை அரங்கேற்றியது நினைவில் உள்ளது. சோவியத் யூனியன் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு செயற்கை மழைக்கான முயற்சிகளும் செய்யப்பட்டன. பஞ்சமும் சேர்ந்து கொண்டது. அப்போது திருவில்லிபுத்தூர் இருந்த ராமநாதபுரம் மாவட்டம்தான் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். மக்கள் கப்பைக் கிழங்கை உணவாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எம் ஜி ஆர் திறந்த கஞ்சித் தொட்டிகள் மிகப் பெரிய அரசியல் ஆயுதங்களாக மாறின. கலைஞரின் அன்றைய ஆட்சியின் மிகப் பெரிய களங்கமாக அது கருதப்பட்டது.எங்களைப் போன்ற இல்லங்களிலும் அரிசிக்குப் பதிலாக கேப்பை (கேழ்வரகு), கோதுமை ஆகியவற்றுக்கு நகர வேண்டியிருந்தது.
அப்போது வீடுகளில் நகராட்சி குடிநீர் ஒரு நாளைக்கு ஐந்தாறு குடங்கள் மட்டுமே வரும். அதுவும் குழாய் மட்டத்தை இறக்கிக் கொண்டே சென்றால்தான் தண்ணீர் கிடைக்கும். போட்டி போட்டுகொண்டு பக்கத்து பக்கத்து வீட்டில் குழாய் இறங்கிக் கொண்டே போகும். பற்றாக்குறை எப்படி பொறாமைகளை உருவாக்கும், மனித உறவுகளை பாதிக்கும் என்பதை அனுபவ ரீதியாகக் கண்டிருக்கிறேன்.
அரங்கநாதர் சன்னதி தெருவும்,சக்கரைக்குளமும் சந்திக்கிற முனையில் ஒரு அடி குழாய் போடப்பட்டது. போர் இயந்திரம் உள்ளே துளை போட துளை போட தண்ணீர் பீச்சியடிப்பதைப் பார்க்க நூற்றுக் கணக்கானோர் திரண்டு நின்றதும், ஆரவாரம் செய்ததும் மறக்க இயலாது.அந்த அடி குழாயில் தண்ணீர் பிடிக்க நீண்ட வரிசை இருக்கும். அதன் வால் பழைய முனிசிபல் அலுவலகத்தின் வாசலையும் தாண்டும். வரிசையில் நிற்கிற நேரம் நட்பு மலர்களும் பூக்கும். சாதாரண மக்களின் அவலங்கள் இப்படிப்பட்ட சின்ன சின்ன சந்தோசங்களில்தான் சிறிது ஈடுகட்டப் படுகின்றன. வரிசைகளில் வரும் சண்டைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு நாளின் முக்கியமான நேரங்கள் இவ்வாறு தண்ணீர் வரிசையிலும், குளியல் துவையலுக்கு அலைவதிலுமே கழிந்ததை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. இப்போதும் சாமானிய மக்களின் நேரங்கள் ரேசன், அரசு பொது மருத்துவ மனை வரிசைகளில் கழியத்தானே செய்கின்றன.
அப்போதெல்லாம் குளிப்பதற்கும், துவைப்பதற்கும் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் போய் பம்ப் செட்டிற்கு போவோம். சாணியைக் கரைத்து குழாய் வழியாக ஊற்றி அதை ஸ்டார்ட் செய்தவுடன் முதலில் சாணிக்கரைசல் அழுக்காக வெளியே வரும். முதல் முதலில் தலையை உள்ளே விட கடும் போட்டி இருக்கும். ஆனால் அவ்வளவு தண்ணீர் பற்றாக்குறை என்பதாலோ என்னவோ நிறைய ஆண்கள் தோளில் பெரிய வெண்கலப் பனைகளில் நெடுந்தூரம் தண்ணீர் சுமந்து வருவார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதலில் அடித்த மழை பனிக்கட்டி மழையாக இருந்தது. எங்கள் வீடு ஓட்டு வீடு என்பதால் யாரோ கல்லெறிவது போல சப்தம். ரோடு முழுக்க ஆனந்தப் பெருக்கு. பனிக்கட்டிகளை ஓடி ஓடி அள்ளியவர்கள் குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களும்தான்.